”வருங்காலத்தில் பிளவுவாத பா.ஜ.க.வுடன் நேரடிக் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவில் தமிழ்நாட்டைச் சுரண்டிக் கொள்ளை அடித்து, அவர்களிடம் நெடுஞ்சாண்கிடையாகத் தி.மு.க. சரணாகதி அடைந்துள்ளது.” என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் விடுவதும், ஆளும்கட்சியாக இருக்கும்போது கைகுலுக்கி காலில் விழுவதும்தான் இந்த கபட நாடக தி.மு.க. தலைமையின் பித்தலாட்ட அரசியல். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிய தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள். திடீரென இந்த வருடம் மட்டும் செல்ல வேண்டிய அவசியம் என்ன? இது, மாநிலத்திற்கான நிதியைப் பெறுவதற்காக அல்ல. தன்னுடைய குடும்ப வாரிசு நிதியைக் காப்பாற்ற மட்டுமே என்பது சாமானிய மக்கள் நன்கு அறிந்ததே.
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மன்றத்தில் தோல்வி உறுதி என்பது தி.மு.க.வுக்குத் தெரிந்துவிட்டது. அதனால் நேர்முகக் கூட்டு, மறைமுகக் கூட்டணி என்று. ஒன்றியத்தை ஆளும் பிளவுவாத பாஜகவிற்குச் சாமரம் வீசியாவது இனி காலத்தை ஓட்டித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறது. இப்படி இறுமாப்புக் கணக்குகளைப் போடுபவர்களுக்கு எம் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடத்தைப் புகட்டத் தயாராகிவிட்டார்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
குறிப்பாக, வருங்காலத்தில் பிளவுவாத பா.ஜ.க.வுடன் நேரடிக் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவில் தமிழ்நாட்டைச் சுரண்டிக் கொள்ளை அடித்து, அவர்களிடம் நெடுஞ்சாண்கிடையாகத் தி.மு.க. சரணாகதி அடைந்துள்ளது. இந்த அவலமான தி.மு.க அரசின் ஊழல் பெருச்சாளிகள் அனைவரும் தமிழ்நாட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்டு, அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு தமிழக வெற்றிக் கழகம் உண்மையான மக்களாட்சியை அமைக்கும் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்!