கோயில் விழாக்களில் நடைபெறும் இசைக் கச்சேரிகளில் பக்தி பாடல்களை மட்டுமே பாட வேண்டும் என்றும் சினிமா பாடல்களுக்கு அனுமதிக்கக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கோயில் விழாக்களில் சினிமா பாடல்களை பாடுவதை தடை செய்யவும், கோயில்களில் அறங்காவலரை நியமிக்க உத்தரவிட கோரியும் புதுச்சேரியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
அந்த மனுவில், புதுச்சேரி திருமலையராயன் பட்டினம் பகுதியில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் சமீபத்தில் நடைபெற்ற இசைக்கச்சேரியில் பக்தி பாடல்களைவிட சினிமா பாடல்கள் அதிகளவில் பாடப்பட்டதாகவும், கோயிலுக்கு அறங்காவலர் நியமிக்க கோரியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி பரத சக்ரவர்ததி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், கோயில்களில் பக்தி பாடல் பாடுவதற்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கி வருவதாகவும், கோயில் அறங்காவலர் விவகாரத்தில் துறையிடம் விளக்கம் கேட்டு பதிலளிப்பதாகவும் பதிலளித்தார்.
இந்த பதிலை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கோயில் வளாகத்தில் பக்தி பாடல்களை தவிர சினிமா பாடல்களை பாட அனுமதி வழங்கக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும், கோயில் விழாக்களின்போது இசைக் கச்சேரி, கலை நிகழ்ச்சிகள், கோயில் வளாகத்துக்கு அருகே மட்டுமே நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் பிற இடங்களில் நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.