புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 முதல் மே 5 ஆம் தேதி வரை, ஒருவார காலத்துக்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், “புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 முதல் மே 5 ஆம் தேதி வரை, தமிழ் வார விழா கொண்டாடப்படும். இந்த ஒரு வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் தமிழையும் பாரதிதாசனையும் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். கவியரங்கங்கள், இலக்கிய கருத்தரங்குகள் நடைபெறும். இதில் சிறந்த தமிழ் அறிஞர்கள், இளம் கவிஞர்கள் இதில் பங்கேற்பார்கள்.
பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழில் சிறந்த விளங்கும் இளம் கவிஞர் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படும். புகழ்பெற்ற படைப்பாளின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வரங்கங்கள் நடத்தப்படும். பள்ளிகளில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டு நடத்தப்படும். மாநிலம் முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இது போன்று தமிழ் நிகழ்ச்சிகள் மூலமாக தமிழ் மணக்கும் வாரமாகக் கொண்டாடப்படும்.” என்றார்.