”தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?" என்று தமிழக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பா.ஜ.க. சார்பில் இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் இன்று காலை முதல் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தமிழிசை செளந்தரராஜன், எச். ராஜா மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோரின் வீடுகளுக்கு முன்பு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது? தேதியே அறிவிக்காமல், போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தி.மு.க. அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பா.ஜ.க. சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தி.மு.க. அரசு, தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, அக்கா தமிழிசை செளந்தரராஜன், மாநிலச் செயலாளர் சகோதரர் வினோஜ் பி.செல்வம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.
பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?
தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?" என்று கூறியுள்ளார்.