சென்னையை அடுத்த புழல் பாடியநல்லூரில் வசித்துவருபவர், கே.ஆர். வெங்கடேஷ். இவர் மீது செம்மரக் கடத்தல், கொலை, மிரட்டல் உட்பட 60 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் முன்னதாக சிறைக்குச் சென்று வெளியே வந்திருந்தார்.
இதனிடையே, தொழில்ரீதியான பணம் வாங்கிக்கொடுப்பதில் இவரை கோகுல்தாஸ், தீபன் சக்ரவர்த்தி ஆகிய இரண்டு பேர் அணுகியுள்ளனர். மொத்தப் பணத்தில் 10 சதவீதம் பணம் கமிசனாகப் பெற்றுக்கொள்வது எனும் அவரின் பேரத்தை அந்த இருவரும் ஏற்றுக்கொண்டார்கள்.
ஒரு கட்டத்தில் எதிர்த்தரப்புக்கு ஆதரவாக மாறிய வெங்கடேஷ், இந்த இருவரையும் மிரட்டத் தொடங்கினார் என்று புகார் அளிக்கப்பட்டது. அதன்படி வெங்கடேசை நேற்று அவரின் வீட்டில் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
அவர் அண்மையில் மதுரைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து எடுத்த படத்தைத் தன் சமூக ஊடகப் பக்கத்திலும் வெளியிட்டார். இந்த நிலையில் அந்தப் படம் தீயாய்ப் பரவிவருகிறது.
இந்தப் பின்னணியில், இன்று மதியம் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்த கே.ஆர். வெங்கடேஷ் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார். ஆகவே, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது." என்று கூறியுள்ளார்.