உயிரிழந்த கீர்த்திகா 
செய்திகள்

காவல் துறை விசாரணையில் அண்ணன்: விஷம் குடித்த தங்கை பரிதாப பலி!

Staff Writer

தஞ்சாவூர் அருகே அண்ணன் கைது செய்யப்பட்டதால், காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை புதன்கிழமை உயிரிழந்தார். மற்றொரு தங்கை தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரி அரச மரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் தினேஷ் (32). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நேற்று காலை தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு செல்வதற்காக இவர் நடுக்காவேரி பேருந்து நிறுத்தத்தில் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த காவல் துறையினர் இவரை விசாரணைக்கு எனக் கூறி நடுக்காவேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

காவல் துறையினரை பின்தொடர்ந்து குடும்பத்தினரும் நடுக்காவேரி காவல் நிலையத்துக்குச் சென்றனர். பொது இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறி வழக்குப் பதிந்து தினேஷை கைது செய்தனர்.

தினேஷ் மீது பொய் வழக்கு போடாதே என்றும், அவரை வெளியே விடுமாறும் காவல்துறையினரிடம் குடும்பத்தினர் வலியுறுத்தினர். ஆனால் தினேஷ் வெளியே விடப்படாததால், மனம் உடைந்த அவரது தங்கைகளான மேனகா (31), கீர்த்திகா (29) இருவரும் காவல் நிலையம் முன் பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்தனர்.

இதனால் 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பொறியியல் பட்டதாரியான கீர்த்திகா இன்று காலை உயிரிழந்தார். மேனகா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையறிந்த உறவினர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திரண்டனர். மேலும் காவல் துறையினரிடம் இந்தச் சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, கீர்த்திகாவின் உடல் உடற்கூறாய்வுக்காக பரிசோதனை கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.