முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
செய்திகள்

‘ஒன்றிய அரசு தரும் அல்வாதான் உலக பேமஸ்’

Staff Writer

“திருநெல்வேலி அல்வா உலக பேமஸ். ஆனால் தற்போது மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரும் அல்வா தான் அதைவிட பேமசாக உள்ளது.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நெல்லையில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழக வரலாற்றுப் பெருமைக்கு நெல்லைதான் அடையாளம். சுதந்திர போராட்ட வீரர்களை கொண்ட மண் திருநெல்வேலி. எந்த ஆட்சியாக இருந்தாலும் அதில் முக்கிய நகரமாக இருந்த ஊர் திருநெல்வேலி. ஓராண்டு, ஈராண்டு அல்ல 17 ஆண்டுகள் வெள்ளையர்களுக்கு எதிராக போராடியவர் பூலித்தேவன்.

நெல்லையின் அடையாளங்களில் மிக முக்கியமானது நெல்லையப்பர் கோவில். இந்த கோவிலில் வரும் நவம்பர் மாதத்திற்குள் வெள்ளி தேர் ஓடும்.

பொருநை ஆற்றின் கரையில் 3,200 ஆண்டுகளுக்கு முன்பே நெல் பயிரிடப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன. ரூ.33 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியக பணிகள் ஏப்ரல் மாதத்திற்கு முடிந்துவிடும்.

நாங்குநேரி வட்டம் மறுங்கால்குறிச்சி மற்றும் திருமலைநம்பிபுரம் கிராமங்களில் 2,291 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய சிப்காட் வளாகம் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டிற்கு நிதியும் இல்லை நீதியும் இல்லை. வெள்ள பாதிப்புக்கு, ரூ.37,907 கோடி நிதி கேட்டோம். ஆனால் ரூ.276 கோடிகள் தான் கொடுத்தனர். பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசு மீண்டும் மீண்டும் வஞ்சிக்கிறது. நிதி தராத மத்திய அரசைக் கண்டித்தோம். நீதிமன்றத்திற்கு சென்றோம்.

திருநெல்வேலி அல்வா உலக பேமஸ். ஆனால் தற்போது மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரும் அல்வா தான் அதைவிட பேமசாக உள்ளது.

மகளிருக்கான திட்டங்களை திமுக ஆட்சியில் பார்த்து பார்த்து செய்து வருகிறோம். ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். அவதூறு பேசுவோருக்கு பதிலுக்கு பதில் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை விஷக்கிருமியின் அக்கப்போர்கள் காலப்போக்கில் காணாமல் போய்விடும்.

நெல்லையில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு, அந்த நீரை சிப்காட் தொழிற்பூங்காக்களுக்கு விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம், தாமிரபரணியில் கழிவுகள் கலப்பது தடுக்கப்படுவதோடு, தொழிற்சாலை தேவைகளுக்கு சுத்திகரிப்பு நீரை பயன்படுத்த முடியும்.

கொண்டிருக்கும் கொள்கையாலும், செய்திருக்கும் சாதனைகளாலும் நாம்தான் தமிழ்நாட்டை என்றென்றும் ஆள்வோம். அவர்கள் சதித் திட்டம் தீட்டி நேரடியாக வந்தாலும் சரி, துரோகிகளை துணைக்கு அழைத்து வந்தாலும் சரி அதனை நிச்சயம் முறியடிப்போம்.” என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.