செய்திகள்

பூண்டு, சீரக கசாயத்தை குடித்தால் கொழுப்பு குறையுமா? - Fact Check

Staff Writer

பரவிய தகவல்: பூண்டு, சீரகம், எலுமிச்சை சாறு கலந்த கசாயத்தை குடித்தால் உடல் கொழுப்பு குறையும்

உண்மை: இந்த கசாயம் உடல் கொழுப்பை குறைக்கும் என்பது தவறானது. நல்ல உணவும், சீரான உடற்பயிற்சியுமே உடல் கொழுப்பை குறைக்கும்.

’உடல் கொழுப்பை குறைப்பது’ எப்படி என்று சமூக ஊடகத்தில் தேடினால், கிடைக்கும் டிப்ஸ்கள் மலைப்பை ஏற்படுத்தும்.

மரபு மருத்துவம் என்ற பெயரில் இன்ஸ்டாவில் பார்த்த ஒரு வீடியோவில், ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு பல் பூண்டை இடித்துப் போட்டு கொதிக்க வைக்கின்றனர். பின்னர் ஒரு ஸ்பூன் சீரகம் போட்டு கொதிக்க வைத்து, அதை வடிகட்டி எலுமிச்சை சாற்றைக் கலக்கின்றனர். இந்த கசாயத்தை வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் உள்ள கொழுப்பு குறையும் என்கிறது இந்த வீடியோ. ஆனால், இந்த கசாயம் உடல் கொழுப்பைக் குறைக்காது என்கிறார் இதய நோய் நிபுணர் ராகவேந்திரா செருக்கு.

“ஆரோக்கியமான உணவும் தொடர் உடற்பயிற்சியுமே உடல் கொழுப்பைக் குறைக்கும். பூண்டில் உள்ள ஆண்டிலிபிடெமிக் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் செய்யலாம். பூண்டில் உயிர்ச்சத்துகள் அதிகம் இருப்பதால் உடல் நலத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

எலிகள் மற்றும் சில மனிதர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகளில் பூண்டில் உள்ள ஆண்டிலிபிடெமிக் கொழுப்பைக் குறைக்க உதவலாம் என நிரூபிக்கப்பட்டுள்ளன.

இந்த கசாயத்தை வெறும் வயிற்றில் குடிப்பது இரைப்பை பிரச்னை உள்ளவர்களுக்குத் தீங்கு விளைவிக்கலாம். எனவே சாப்பிட்ட பின்னர் இந்த கசாயத்தைக் குடிக்கலாம்.” என்கிறார்.

பூண்டு, சீரக கசாயத்துக்குப் பதிலாக, நல்ல உணவை எடுத்துக்கொண்டு தொடர் உடற்பயிற்சி செய்வதால் மட்டுமே உடல் கொழுப்பை குறைக்க முடியும்.

சமூக ஊடகங்களில் வரும் இதுபோன்ற ஹெல்த் டிப்ஸ் வீடியோக்களை தவிர்ப்பதே ஆரோக்கியத்துக்கு நல்லது மக்கா...!

இந்த செய்திக்கட்டுரையை நியூஸ் மீட்டர் தளம் முதலில் வெளியிட்டது.

அந்தச் செய்தி இணைப்பு : Fact Check: Burn body fat by drinking water made from boiling garlic, cumin seeds? Let’s find out

இதை Shakti Collective fact check (சக்தி கலெக்டீவ்) குழுவின் ஒரு பகுதியாக அந்திமழை ஊடகம் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.