11ஆவது உலகத் தமிழர்ப் பொருளாதார மாநாடு 
வணிகம்

4ஆவது உலகத் தமிழர்ப் பொருளாதார மாநாடு...15ஆம் தேதி முதல் 3 நாள்கள்!

Staff Writer

பதினொன்றாவது உலகத் தமிழர்ப் பொருளாதார மாநாடு வருகின்ற 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மூன்று நாள்கள் மலேசியாவில் நடைபெறுகிறது. கோலாலம்பூர் மாநாட்டு அரங்கத்தில் (கேஎல்சிசி) நிகழும் இந்த மாநாட்டை, மூத்த அமைச்சர் துரைமுருகன் தொடங்கிவைக்கிறார்.  

மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி.என்.ரெட்டி தலைமையேற்கிறார்.

17ஆம் தேதி அன்று நிறைவு விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பேசுகிறார். 

மலேசிய உச்சநீதிமன்ற நீதிபதி வசீர் ஆலம் விருதுகளை வழங்க உள்ளார்.

மலேசியாவின் முன்னைய, இப்போதைய அமைச்சர்களுடன், மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன், புதுச்சேரி தொழில்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி முன்னைய சட்டப்பேரவைத் தலைவர்  வி.பி.சிவக்கொழுந்து, விஜிபி நிறுவனக் குழுமத் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோஷம், பிஜிபி நிறுவனக் குழுமத் தலைவர் டாக்டர் பழனி ஜி. பெரியசாமி, அபுபக்கர் நிறுவனத் தலைவர் அபுபக்கர் உட்பட பலரும் கலந்து கொள்கின்றனர்.

சென்னை வளர்ச்சிக் கழகம், உலகத் தமிழர்ப் பொருளாதார நிறுவனத் தலைவர் டாக்டர் விஆர்எஸ். சம்பத் மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

முதலாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் 2009இல் நடத்தப்பட்டது. இரண்டாவது மாநாடு 2011இல் துபாயில் நடத்தப்பட்டது. மூன்றாவது மாநாடு 2016ல் மீண்டும் சென்னையில் நடைபெற்றது.

நான்காவது மாநாடு 2017இல் தென்னாப்பிரிக்காவின் டர்பனிலும், ஐந்தாவது மாநாடு 2018இல் புதுச்சேரியிலும், ஆறாவது மாநாடு 2019 சென்னையிலும் நடத்தப்பட்டன.

ஏழாவது மாநாடு 2020 டிசம்பரில் சென்னையில் இணையவழியில் நடைபெற்றது.

எட்டாவது மாநாடு 2021இல் மீண்டும் சென்னையிலும், ஒன்பதாவது மாநாடு 2023இல் துபாயிலும் பத்தாவது மாநாடு 2024இல் சென்னையில் நடத்தப்பட்டன.

இம்மாநாட்டில் முதலீடு வணிக வாய்ப்புகள், தொழில் மேம்பாட்டுச் சந்திப்புகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பத்துக்கும் மேற்பட்ட அமர்வுகள் இடம்பெறுகின்றன.

இம்மாநாட்டில் தொழிலதிபர்கள், வணிக நிறுவனத் தலைவர்கள், விழை தொழில்புரிவோர், சுயதொழில்புரிவோர், புதிய கண்டுபிடிப்பில் வெற்றி பெற்றவர்கள் ஒன்றுகூடவும், வணிக வளர்ச்சி, முதலீட்டு வாய்ப்புகள், பொருளாதார வளர்ச்சிக்காக தொழில்புரிவோரிடம் பணிகளை ஒப்படைப்பு செய்தல், உலகளாவிய கூட்டுறவினை ஏற்படுத்துதல் தொடர்பான விவாதங்களும் நடைபெறுகின்றன.

உலகம் முழுவதிலும் உள்ள இந்திய வம்சாவளிதொழில் அதிபர்கள், வணிகத் தலைவர்கள் இருபதுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 300-க்கும் மேற்பட்ட பேராளர்கள் பங்கேற்கின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram