இரும்புத் தூள் 
வணிகம்

இரும்புச் சத்து வேணுமா... இனி கொஞ்சம் இரும்புத் தூள் சாப்பிடுங்க!

ம.தினோவிகா

இரும்புச்சத்துக் குறைபாட்டைச் சமாளிக்க எஃகு தயாரிப்பின் துணைப்பொருளாகிய இரும்புத் தூளிலிருந்து உண்ணும் ஊட்டச்சத்துப் பொருளை டாடா ஸ்டீல் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

பொதுவாக ஸ்டீல் பொருட்களை அரிப்பிலிருந்து தடுப்பதற்காக கால்வனைசேசன் எனப்படும் துத்தநாகப் பூச்சுக்கு ஸ்டீல் உட்படுத்தப்படும். அப்போது அமிலத்தால் அது கழுவப்படும். அந்த அமிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் ரெட் ஆக்சைட் எனும் இரும்புத்தூள்கள் பெயின்ட் எனப்படும் வண்ணப்பூச்சுகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.

டாடா ஸ்டீல் நிறுவனம், இந்த இரும்புத் தூளை மேலும் பயனுள்ள வகையில் பயன்படுத்த முயற்சியில் ஈடுபட்டது.

இரும்புத் தூளைப் பயன்படுத்தி 'பைரோநியூட்ரி38' எனும் ஊட்டச்சத்துப் பொருளை டாடா ஸ்டீல் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

நம் உடலில், ஆக்ஸிஜனைக் கொண்டுசெல்லும் சிவப்பணுக்களில் உள்ள புரதமான ஹீமோகுளோபினை உருவாக்க இரும்புச்சத்து தேவைப்படுகிறது.

உலக அளவில் இரும்புச்சத்துக் குறைபாடு மிகவும் பொதுவான ஊட்டச்சத்துக் குறைபாடுகளில் ஒன்றாகும்.

ஆனால், அதற்காக ஒரு கரண்டி இரும்புப் பொடியை உண்பதால் அந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டை சரிசெய்ய முடியாது.

ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சரிசெய்ய, இரும்புத் தூளை நம் உடல் உறிஞ்சி பயன்படுத்தும் வகையில் உருவாக்க வேண்டும்.

பைரோநியூட்ரி38 எனும் ஊட்டச்சத்துப் பொருளை செயற்கை இரைப்பைச் சூழலில் ஆய்வு செய்தபோது, ஹைட்ரோகுளாரிக் அமிலத்தில் 30 நிமிடங்களில் முழுமையாகக் கரைவதாக டாடா ஸ்டீல் நிறுவனம் கூறுகிறது.

ஏதேனும் ஓர் உணவு அல்லது ஊட்டச்சத்து நிறுவனத்திற்கு உரிமம் வழங்கி, இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த உள்ளதாகக் கூறியுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram