ரிலையன்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல உணவுபொருள் பிராண்டான மன்னாவை வாங்கி இருக்கிறது. ரிலையன்ஸின் நுகர்வோர் பொருட்கள் பிரிவான ஆர்சிபிஎல் (RCPL), இந்த பிராண்டை கையகப் படுத்தி உள்ளது.
மன்னா என்பது சதர்ன் ஹெல்த் ப்ராடட்க்ஸ் (Southern Health Products Private limited) நிறுவனத்தின் பிராண்ட் ஆகும். இந்த நிறுவனத்தை 156 கோடி ரூபாய் கொடுத்து ரிலையன்ஸ் 100% முழுமையாக கையகப்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
சிறுதானியங்களைக் கொண்டு செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், ஊட்டச்சத்து பானங்கள், சத்துமாவு போன்றவை மன்னா என்ற பிராண்ட் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தன. மன்னாவை தென்னிந்தியாவில் இருந்து நாடு முழுக்க அறிமுகப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல இருப்பதாக ரிலையன்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் முக்கியமான இன்னொரு உணவுப் பொருள் நிறுவனமான உதயம், இந்த நிலையன்ஸ் கைவசம் ஏற்கெனவே சென்று விட்டது. 600 கோடிக்கும் மேல் வருவாய் உள்ள இந்த உதயம் பருப்பு நிறுவனத்தில் 70% ரிலையன்ஸ் வாங்கி உள்ளது.
தமிழ்நாட்டின் பிரபல நுகர்வோர் உணவுப் பொருள் நிறுவனங்களை ரிலையன்ஸ் கையகப் படுத்தி வருவது அது நுகர்வோர் உணவுச்சந்தையில் தீவிர கவனம் செலுத்துவதைக் காட்டுகிறது.