சு.செந்தில் ராஜ்
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரச்சாரங்களில் ஒன்று தி.மு.க அரசு அதிகம் கடன் வாங்கியுள்ளது என்பதாக அமைந்தது. தற்போது பதவியேற்றுள்ள த.வெ.க முதல்வரும் அதிகமாகக் கடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கு தற்போதைய எதிர்க்கட்சி தலைவர், ‘இதில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை. விதிகளுக்கு உட்பட்டு தான் முந்தைய ஆட்சியில் கடன் வாங்கியுள்ளோம்’ என்று சட்டசபையில் விளக்கம் கொடுத்துள்ளார். பொருளாதார ஆய்வாளர்களும் விதிகளுக்குட்பட்டே முந்தைய அரசு கடன் வாங்கியுள்ளது என்றே விளக்கம் கொடுக்கின்றனர். உண்மை என்ன முந்தைய அரசு முறைகேடாக அதிகம் கடன் வாங்கியுள்ளதா? எது உண்மை?
பொதுவாக 10 லட்சம் கோடி கடன் என்பது ஒவ்வொரு மனிதனின் மனோபாவத்திலும் பெரிதாகவே தோன்றும். 9.99 லட்சம் கோடி கடன் என்றால் பெரிதாக தெரியாது. இது ஒரு அடிப்படை என்றாலும் இதன் பின்புலத்தில் பல முரண்பாடுகள் உள்ளன.
முதலில் அரசின் வருவாய், நிகர உற்பத்தி(GSDP), கடன் போன்றவற்றின் தரவுகளை ஆய்வு செய்வோம். பின் அதன் அடிப்படையில் விவாதத்தை மேற்கொண்டால் மட்டுமே உண்மை தன்மை புரியும். (தரவுகள் கோடிகளில்)
கொரானா காலகட்டத்தில் மத்திய அரசு நிகர உற்பத்தியில் முன்பிருந்த கடனைவிட 3% முதல் 5% வரை கூடுதலாக கடன் பெறவும். அதில் நிகர உற்பத்தியில் 3.5% எந்த வித நிபந்தனையும் இன்றியும், மீதமுள்ள 1.5% குறிப்பிட்ட பொருளாதார சீர் திருத்தத்தை மேற்கொள்ளவும் நிதி பொறுப்பு சட்டம்-2003 இல் மாற்றத்தை செய்தது. அது மட்டுமின்றி நிதி பற்றாகுறை நிகர உற்பத்தியில் 4% வரையும் பின் அதை நிகர உற்பத்தில் 3% என்ற அடிப்படையிலும் இருக்கவேண்டும் என்று நிதி பொறுப்பு சட்டம் -2003 இல் மாற்றம் செய்தது.
அந்த அடிப்படையில் கடன் 2020-21 காலகட்டத்தில் நிகர உற்பத்தியில் இருந்த கடனளவான 23.4% லிருந்து 28.3% அளவிற்கு தமிழக அரசு வாங்கியது. இப்போது 2026-27 பட்ஜெட் அடிப்படையில் தமிழக அரசின் கடன் 26.4% என்ற அளவில் கொரானாவிற்கு முந்தைய அடிப்படையிலிருந்து 3% மட்டுமே கூடுதல் கடனை பெற்றுள்ளது. இந்த அடிப்படையில் தமிழக அரசு கடன் பெற்றது சரியான ஒன்று என்ற வாதம் ஏற்புடையது. தமிழக அரசின் கடன் மத்திய அரசின் சட்ட வரம்புக்குள்தான் இருக்கிறது.
ஆனால் மத்திய அரசின் நிதி பொறுப்பு சட்டத்தின் வரை முறை சரியான ஒன்றா? என்ற அடிப்படை வினாவுக்கு நாம் செல்லவேண்டும்.
நிதி பொறுப்பு சட்டம் பொதுப்படையாக கடன் கொள்கையை நிகர உற்பத்தி அடிப்படையில் வரையறுத்துள்ளது இது சரி எனப் படவில்லை. ஆனால் ஒரு அடிப்படை இதற்குள் மறைந்துள்ளது. நிதி பொறுப்பு சட்டம் அதிக பட்ச கடன் உச்ச வரம்பு என்று தான் கொள்கையை வரையறுத்துள்ளது. கண்டிப்பாக இந்த உச்ச வரம்பு அளவுக்குக் கடனை வாங்க வேண்டும் என்று சொல்லவில்லை.
பொதுப்படையாக நிகர உற்பத்தி அதிகரித்தால் மாநிலங்களின் வருவாய் அதிகரிக்கும் என்ற அடிப்படையில் இந்த கடன் கொள்கையை வகுத்துள்ளது. ஆனால் இது மிகவும் தவறான ஒன்று.
நிகர உற்பத்தி அதிகரித்தால் வருவாய் அதிகரிக்கும் என்ற அடிப்படை சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்துவதற்கு முன்பு ஓரளவிற்கு பொருந்தும். ஆனால் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பின்பு உற்பத்தி மாநிலங்களில் (manufacturing States) நிகழும் நிகர உற்பத்திக்கு இணையாக வருவாய் உயராது. காரணம் சரக்கு மற்றும் சேவை வரியின் அடிப்படையில் உற்பத்தி மாநிலங்களின் பெரும்பாலான விற்பனை பிற மாநிலங்களுக்கே செல்லும். சரக்கு மற்றும் சேவை வரியின் அடிப்படையில் அதிகம் வருவாய் பெறுவது நுகர்வு மாநிலமே. அது மட்டுமின்றி மாநிலங்களின் அனைத்து வரி உரிமைகளையும் சரக்கு மற்றும் சேவை வரி பறித்துக் கொண்டுவிட்டது. இப்போதைய சூழலில் மாநில அரசின் வருவாய் கட்டமைப்பு, உள்ளாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை விட பலவீனமாக உள்ளது என்றே சொல்லவேண்டும். மாநிலங்களைப் பொறுத்த வரை பெட்ரோல், டீசல் மற்றும் மது ஆகியவை மீது மட்டுமே வரி உரிமை உள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தலின் மூலம் உற்பத்தி மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு கொடுக்கும் என்ற அடிப்படையிலேயே இந்த சட்டம் அமல் படுத்தப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு பிறகு உற்பத்தி மாநிலங்கள் நிலை என்ன? என்ற வினாவிற்கு விடையே இல்லை!
இந்த அடிப்படையில் நிகர உற்பத்தி(GSDP) அதிகரித்தாலும் வருவாய் அதிகரிக்காது என்பதே நிதர்சனம். ஒரு மாநிலம் உற்பத்தித் துறையில் எந்த அளவிற்கு வேகமாக வளர்கிறதோ அதன் இணையாக வருவாய் வளர்ச்சி விகிதம் பாதாளத்தை நோக்கியே செல்லும்.
இந்நிலையில் மாநிலங்கள் நிகர உற்பத்தியில் இவ்வளவு கடன் வாங்கலாம். நிகர உற்பத்தியில் இவ்வளவு தான் பற்றாக்குறை இருக்க வேண்டும் என்று கடன் பொறுப்பு மற்றும் பற்றாக்குறை கொள்கையை வரையறுத்து இருப்பது தவறு.
தமிழ்நாடு உற்பத்தி மாநிலம் ஆகும். இதனால் நமக்கு சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடை மத்திய அரசு 2022-23 வரை கொடுத்துள்ளது. அதற்கு பிறகுதான் நிதி பொறுப்பு சட்ட அடிப்படைப் பிரச்னை தொடங்குகிறது. மேலே உள்ள அட்டவணை இந்தப் பிரச்சனையைத் தெளிவாக பிரதிபலிகின்றது. 2023-24, 2024-25, 2025-26 மற்றும் 2026-27 ஆண்டுகளின் நிகர உற்பத்தி வளர்ச்சி முந்தைய ஆண்டோடு ஒப்பீடும் போது, முறையே 13.34%, 15.98%, 14.40% மற்றும் 14.00% ஆக உள்ளது. அதே நேரம் வருவாய் அடிப்படையிலான வளர்ச்சி விகிதம் 2023-24, 2024-25, 2025-26 மற்றும் 2026-27 ஆண்டுகளில் முறையே 4.72%, 7.11%, 12.24% மற்றும் 3.69% ஆக உள்ளது. 2023-24 க்கு முந்தைய வருடங்களில் சராசரி வருவாய் வளர்ச்சி சாதாரணமான சூழலில் 12% முதல் 13% என்ற அளவில் இருக்கின்றது. ( இதை முந்தைய அட்டவணையில் காணலாம்).
கடன் கொள்கையை வருவாயை கருத்தில் கொள்ளாமல் நிகர உற்பத்தி அடிப்படையில் நிர்ணயம் செய்தது மிகப்பெரிய பொருளாதாரப் பிழை. அதுமட்டுமல்ல, வருவாய் எப்படி இருந்தாலும் நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) நிகர உற்பத்தியில் 3% க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பது அடுத்த பொருளாதாரப் பிழை. வருவாய் குறைகிறது,ஆனால் செலவு அதிகரிக்கிறது. குறிப்பாக நிலையான செலவுகளின் வளர்ச்சி விகிதம் பெருமளவு உயரும் போது இது எப்படி சாத்தியமாகும்? குறிப்பாக அரசு ஊழியர் மற்றும் ஒய்வூதியதாரர் அகவிலைப்படி ஜனவரி 2022 இல் 31% என்பதிலிருந்து 2025 இல் 55% ஆக உயர்கின்றது. அது மட்டுமின்றி நிகர உற்பத்தி அளவில் (வருவாயை கணக்கில் கொள்ளாமல்) கடனை தொடர்ந்து வாங்கிகொண்டிருந்தால் வருங்காலத்தில் மிகப்பெரிய நிதிச்சுமை ஏற்பற்படும் ஒரு கட்டத்தில் மக்கள் நலத்திட்டங்களை முழுவதுமாக நிறுத்த நேரிடும். அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாது, கடன் பாக்கியை திருப்பிக்கொடுக்க முடியாமல் போகும். தமிழக அரசே திவால் நிலை ஏற்படும். நிகர உற்பத்தி வளர்ச்சி என்ற மாயை மட்டுமே எஞ்சியிருக்கும்.
இப்போது முந்தைய தமிழக அரசு 10 லட்சம் கோடி கடன் வாங்கியது சரியா? தவறா? என்ற விவாதத்திற்கு வருவோம். நாம் மேலே பார்த்த விவரங்களின் அடிப்படையில் தமிழக அரசு செய்தது பொருளாதார பிழை என்றே சொல்ல வேண்டும். கடன் வாங்குவதற்கு, நிகர உற்பத்தியில் உச்சவரம்பை மட்டுமே நிதி பொறுப்பு சட்டம் நிர்ணயிக்கிறது. ஆனால் நாம் எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் உரிமை மாநில அரசிடம்தான் உள்ளது. நிதி பொறுப்பு சட்டம் வரையறுத்ததை ஒரு பகுதியாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர அதுவே இறுதியான வரையறை என்ற அடிப்படையில் கடனை பெற்று அதை நியாயப்படுத்துவது என்பது தவறான ஒன்றாகும்.
ஓர் உதாரணம் மூலம் இதை விளக்கலாம். ஒருவர் ரூ 10 கோடி ரூபாய்க்கு சொத்து மதிப்பை வைத்துள்ளார். அவருக்கு வருட வருமானம் ரூ.7 லட்சம் என்று வைத்துக்கொள்ளலாம். அவருக்கு ரூ 3 கோடி கடன் தேவைப்படுகிறது என்றால் தாராளமாக ரூ.3 கோடி கடன் பெற அவருக்கு உரிமை உள்ளது. ஆனால் ஆண்டு வருவாய் ரூ 7 லட்சம் மூலம் கடனுக்குரிய வட்டியை செலுத்த கூட முடியாது. அதனால் வங்கிகள் ரூ.3 கோடி பெற அவருக்கு உரிமை இருந்தாலும் அவர் வருவாயை அடிப்படையாக கொண்டு அதன் அடிப்படையிலேயே கடன் கொடுக்கும்.
மத்திய அரசின் நிதிப் பொறுப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே மிகப்பெரிய பொருளாதார முரண்பாடு இருக்கின்றது. சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடை உற்பத்தி மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மட்டுமே கொடுப்பது அடுத்த பொருளாதார முரண்பாடு. அனைத்து வரி உரிமைகளையும் பறித்துக்கொண்டு இந்த குறுகிய கால இழப்பீடை மட்டும் கொடுத்து இருப்பது சரியாகத் தோன்றவில்லை!
சு.செந்தில்ராஜ், Economic Architecture & Strategy Designer, Mobile: 9840454380