மதுபாட்டில்கள் 
வணிகம்

இந்தியாவில் அதிகம் விற்பனையாவது எந்த சரக்கு?

Staff Writer

சமீப காலமாக ஒயின் மற்றும் ஜின் போன்ற மதுபானங்களின் விற்பனை ஒருபக்கம் அதிகரித்தாலும், இந்தியாவின் மதுபானச் சந்தையில் விஸ்கிதான் அதி அளவில் விற்பனை செய்யப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஒரு பாட்டில் விஸ்கி சராசரியாக ரூ.750 க்கு குறைவு என்ற அளவில் உள்ள விஸ்கிகள்தான் இப்படி அதிகம் விற்பனை ஆகின்றன.

சர்வதேச ஒயின் மற்றும் ஸ்பிரிட் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரத்தின் படி, மொத்த மதுபான விற்பனையில் மூன்றில் இரண்டு பங்கு விற்பனையாவது விஸ்கி என்று தெரிய வந்துள்ளது. அதுவும், விற்பனையாகும் மொத்த விஸ்கியில் 85 சதவிகிதத்தில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் 10 நிறுவன மதுபானங்களே கோலோச்சுகின்றன என்கிறது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கி விற்பனை 3.3 சதவிகிதமாக இருக்கும் நிலையில், இது 2027ஆம் ஆண்டு வாக்கில் 3.7 சதவிகிதமாக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருபக்கம் வெளிநாட்டு விஸ்கிகளின் விற்பனை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு நிகராக உள்நாட்டு தயாரிப்பு விஸ்கிகளும் விற்பனையாகும் என்கின்றனர்.

கொரோனா பேரிடர் காலத்துக்கு முந்தைய விற்பனை அளவை விஸ்கி எட்டிவிட்டதாகவும், அதுபோல, ஓட்காவும், விற்பனை விகிதத்தில் மிகப்பெரிய உயர்வுடன் 34 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும் புள்ளிவிவரப் பட்டியல் தெரிவிக்கிறது.

உலகிலேயே மதுபான விற்பனை சந்தைப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில், அடுத்த ஐந்தாண்டுகளில் மதுபான விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 40 சதவிகிதம் அளவுக்கு மதுபான விற்பனை அதிகரித்திருக்கும் நிலையில், ஒயின் விற்பனையும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

வெளிநாட்டில் இருந்து வரும் விஸ்கிகளில் ஸ்காட்ச் அதிகமகா விரும்பப்பட்டாலும் ஐரிஷ், அமெரிக்கா, ஜப்பான், கனடா விஸ்கிகளும் விரும்பப்படுகின்றன. இதற்கடுத்த இடத்தில் இந்திய சிங்கிள் மால்ட் விஸ்கிகள் இருக்கின்றன.