செய்திகள்

கனடா தேர்தல்: போட்டியிட்ட 6 தமிழரில் 3 பேர் வெற்றி- மீண்டும் அமைச்சர்களாகும் இருவர்!

Staff Writer

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழர்கள் கேரி ஆனந்தசங்கரி, யுவனிதா நாதன் ஆகிய 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல், சென்னையை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.

கனடா நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடக்கம் முதலே, முன்னாள் பிரதமர் ஜட்டீன் ட்ரூடோவின் லிபரல் கட்சி முன்னிலை பெற்று வந்தது. இறுதியில் லிபரல் கட்சி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கனடாவின் இடைக்கால பிரதமராக செயல்பட்ட மார்க் கார்னி, மீண்டும் பிரதமராகிறார்.

அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கனடா நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழர்கள் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட கேரிஆனந்தசங்கரி, யுவனிதா நாதன், மற்றும் சென்னையை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த் என 3 பேரும் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டனர். தேர்தலில் 6 தமிழர்கள் போட்டியிட்ட நிலையில், 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

கனடா தேர்தலில் தற்போது வெற்றி பெற்றுள்ள அனிதா ஆனந்த் கனடாவின் ஒக்வில் கிழக்கு தொகுதியிலும், கேரி ஆனந்தசங்கரி ஸ்கார்பரவ்ப் பார்க் தொகுதியிலும், பிக்கெர்லின் புருக்லிவ் தொகுதியில் யுவனிதா ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று லிபரல் கட்சி ஆட்சி அமைய உள்ள நிலையில், அனிதா ஆனந்த், கேரி ஆனந்தசங்கரி ஆகியோருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.