கமல்ஹாசன் 
செய்திகள்

‘மன்னிப்பு கேட்க முடியாது’ – மிரட்டலுக்கு கமல் பதிலடி!

Staff Writer

தனது பேச்சுக்கு கன்னடர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ’அன்பு ஒருபோதும் மன்னிப்புக் கேட்காது‘ என பதில் அளித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

‘தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என தக் லைஃப் படவிழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதுக்கு கர்நாடகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கமலின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையானதை அடுத்து, அவர் மன்னிப்பு கேட்கக் கூறியும், தக்லைஃப் படத்திற்கு தடைவிதிக்க கோரியும் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் கன்னட அமைப்புகளும், பாஜக, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் அவரது உருவப்படத்தையும், தக்லைஃப் போஸ்டரையும் கிழித்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தக்லைஃப் திரைப்பட ப்ரோமோசன் நிகழ்ச்சிக்காக நேற்று கேரளா சென்றிருந்த நடிகர் கமல்ஹாசனிடம் தற்போது எழுந்துள்ள கன்னட சர்ச்சைக் குறித்து அங்குள்ள செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “கன்னட மொழி குறித்து நான் பேசியதை சிலர் தவறாக திரித்து பேசுகிறார்கள். அது சிவண்ணா மீதான அன்பின் நிமித்தமாகத் தான் நான் பேசினேன். அவரது தந்தை என்னுடைய தந்தை போன்றவர். நான் தவறாக எதுவும் பேசவில்லை.

தமிழ்நாடு எல்லோருக்குமானது. எங்கள் மாநிலத்தில் மேனன், ரெட்டி, கன்னட ஐயங்கார் மற்றும் தமிழர்களும் முதல்வர்களாக இருந்துள்ளனர். எனக்கு ஒரு பிரச்சனை வரும்போது, அப்போதிருந்த கர்நாடகா முதல்வரும், கன்னடர்களும் தான் எனக்கு ஆதரவு கொடுத்தனர். அவர்கள், ’நீங்கள் இங்கே வாருங்கள். நாங்கள் வீடு தருகிறோம். வேறு எங்கும் போகாதீர்கள்’ என்றனர்.

தக்லைஃப் படத்தையும், எனக்கு எதிரான பிரச்சனையையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள். மொழி குறித்து பேச அரசியல்வாதிகளுக்கு எந்த தகுதியும் இல்லை. அவர்கள் அதுபற்றி பேசுவதற்கு போதுமான படிப்பறிவு வேண்டும். என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்.

மொழி குறித்த இந்த ஆழமான விவாதத்தை வரலாற்று அறிஞர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், மற்றும் மொழி வல்லுநர்களிடம் விட்டுவிடுவோம்.

அவர்கள் பக்கமிருந்து பார்த்தால், அவர்கள் சொல்வது சரி, என் பக்கமிருந்து பார்த்தால் நான் சொல்வது சரி. மூன்றாவதாக கல்வியாளர்களிடம் கேட்டால், இருவர் சொல்வதும் சரி என்பார்கள். இறுதியாக நான் சொல்வது அன்பு ஒருபோதும் மன்னிப்புக் கேட்காது” என கமல்ஹாசன் தெரிவித்தார்.

அவரின் இந்த கருத்து, கன்னடர்களை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது.