முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு 
செய்திகள்

அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலின்!

Staff Writer

சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சூட்டினார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

'சென்னை, கொளத்தூர், பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இம்மருத்துவமனைக்கு 'பெரியார் அரசு மருத்துவமனை' என்று பெயர் சூட்டிட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இம்மருத்துவமனை விரைவில் தமிழ்நாடு முதல்வரால் திறந்து வைக்கப்படவுள்ளது.

பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனையை சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்த தமிழக முதல்வர் 8.3.2023 அன்று மூன்று தளங்களுடன் புதிய மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார். அதன் தொடர்ச்சியாக, மேலும் சில சிறப்பு சிகிச்சைகளை வழங்குவதற்காக கூடுதலாக மூன்று தளங்களுடன் விரிவாக்கம் செய்திட 7.3.2024 அன்று முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

மொத்தம் ஆறு தங்களுடன் கட்டப்பட்டுள்ள இப்புதிய மருத்துவமனையின் தரைத்தளத்தில் 20 படுக்கைகள் கொண்ட தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முனைப்பு வார்டுகள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி, புறநோயாளிகள் பிரிவுகள், முதல் தளத்தில் மகப்பேறு பிரிவு, அறுவை அரங்கங்கள், நவீன இரத்த வங்கி, இரண்டாம் தளத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவுகள், மூன்றாம் தளத்தில் மகப்பேறு மற்றும் குடும்ப கட்டுப்பாடு வார்டு, நான்காம் தளத்தில் ஆண்கள் பொது மருத்துவப் பிரிவு, இரைப்பை குடலியல் பிரிவு, ஐந்தாம் தளத்தில் இருதயவியல் பிரிவு, அறுவை அரங்கங்கள், தோல்நோய் வார்டு, ஆறாம் தளத்தில் சிறப்பு சிகிச்சை வார்டுகள், புற்றுநோயியல் பிரிவு, நரம்பியல் பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகளுடன் மொத்தம் 260 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இப்புதிய மருத்துவமனையினை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (23.2.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.