தனியார் மருந்தகங்களில் ரூ.70க்கு விற்பனை செய்யப்படும் சர்ச்சரை மாத்திரைகள், நாளை தொடங்கி வைக்கப்படும் முதல்வர் மருந்தகங்களில் ரூ.11க்கு கிடைக்கும் என்று திமுக எல்எல்ஏ எழிலன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் ஜெனரக் மருந்துகளும், பிற மருந்துகளும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து முதல்வர் மருந்தகம் அமைக்க பி.பார்ம் அல்லது டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விண்ணங்கள் பெறப்பட்டது.
இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக பிப்ரவரி 24ஆம் தேதி தமிழ்நாட்டில் ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதில் சென்னையில் மட்டும் சுமார் 33 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வர் மருந்தகங்களை திறந்து வைக்கவுள்ளார்.
இதுதொடர்பாக திமுக எம்எல்ஏவும், மருத்துவருமான எழிலன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், முதல்வரின் மருந்தகம் என்ற திட்டம் நாளை தொடங்கி வைக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் முதல்வர் மருந்தகம் திறக்கப்படவுள்ளது. விலைவாசி ஏற்றத்தால் மக்கள் கடுமையான பாதிப்பில் இருக்கிறார்கள்.
ரத்த கொதிப்பு, இருதய பலவீனம் உள்ளிட்ட பாதிப்புகளால் தினமும் மாத்திரை சாப்பிட வேண்டிய நிலை உள்ளது. இதற்காக அதிக தொகை செலவு செய்யப்படுகிறது. அதனை குறைக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலமாக தொழில்முனைவோருக்கும் சாதகம் ஏற்பட்டுள்ளது. மருந்துக் கடைகளில் மருந்து வாங்கும் போது மக்கள் பலரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.
அந்த சுமையை குறைக்க முதல்வர் மருந்தகம் திறக்கப்படுகிறது. இந்த மருந்தகத்தில் 75 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும். இந்த திட்டத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு மருந்துகள் சேவை கழகம் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன. இந்த திட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் மருந்துகள் குறைக்கப்படாது.
அங்கும் மருந்துகள் தொடர்ந்து அளிக்கப்படும். இந்த திட்டம் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் பொருளாதார சுமையை குறைக்கவே தொடங்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய்க்கான METFORMIN மாத்திரை (30 மாத்திரையில் அடங்கிய ஒரு ஸ்ட்ரிப்) தனியார் மருந்தகங்களில் ரூ.70க்கும், மத்திய அரசின் பிஎம்பிஜேகே மருந்தகங்களில் ரூ.30க்கும், தமிழக அரசின் முதல்வர் மருந்தகங்களில் ரூ.11க்கும் கிடைக்கும்.
இதுதான் வித்தியாசமாக இருக்கிறது. இதன் மூலமாக மாதம் மாதம் மாத்திரைகளுக்கு செலவு செய்யும் தொகை மக்களுக்கு குறையும். கிட்டத்தட்ட 75 முதல் 50 சதவிகிதம் வரையிலான மருந்துகள் செலவு மக்களுக்கு சேமிப்பாக கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.