சென்னை, கொளத்தூரில் முதலமைச்சர் கலந்துகொண்ட பொங்கல் விழா 
செய்திகள்

தலைவர்கள் பொங்கல் வாழ்த்துச் செய்தியில் சொன்னது என்ன?

Staff Writer

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முத்தமிழ், முச்சங்கம், முக்கனி, மூவேந்தர், முக்கொடி கொண்ட தமிழரின் தனிப்பெரும் பண்பாட்டு விழாவான பொங்கல் திருநாள் மூன்று நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. நானிலம் போற்றும் இந்த நன் நாளினை எழுச்சியோடு இந்தப் புத்தாண்டில் கொண்டாட எதிர்நோக்கியுள்ள உலகத் தமிழர் அனைவருக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!

பொங்கல் விழா என்பது உழவை, உழைப்பை, சமத்துவத்தை, இயற்கையின் சிறப்பைப் போற்றும் விழா! தமிழரின் பண்பாட்டை, நாகரிகத்தை, வீரத்தைப் பறைசாற்றும் பெருவிழா! விளைச்சலின் இன்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் விழா! உற்றார், உறவினர், சுற்றம், நட்பு, ஊரார் உடன் கொண்டாடிக் களித்திடும் விழா!

பள்ளிக்கல்வி தொடங்கி உயர்கல்வி வரை, வேளாண் வளர்ச்சி முதல் தொழில்துறை வளர்ச்சி வரை, பள்ளி சிறார்களுக்கு காலை உணவு தொடங்கி அவர்தம் ஆற்றலையும் அறிவினையும் பெருக்கிட நான் முதல்வன் வரை, மகளிருக்கு உரிமைத்தொகை தொடங்கி மாணவக் கண்மணிகளுக்குத் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் வரை என மூன்றாண்டுகளில் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்துள்ளது தமிழ்நாடு! பத்தாண்டு காலமாக உறங்கியிருந்த தமிழ்நாடு, இன்றைக்கு வீறுநடை போட்டு, அனைத்துத் துறைகளிலும் உயர்ந்து நிற்கிறது. 

எந்தப் பிரிவினரும் ஒதுக்கப்படவில்லை; எந்த மாவட்டமும் புறக்கணிக்கப்படவில்லை; எந்தத் துறையும் பின்தங்கி நிற்கவில்லை என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறும் அளவுக்குப் பரவலான, சமத்துவமான வளர்ச்சியை அடைந்து காட்டியிருக்கிறோம். நெருக்கடிகள் இல்லாமல் இல்லை; சோதனைகளை எதிர்கொள்ளாமல் இல்லை; இயற்கைப் பேரிடர்கள் தாக்காமல் இல்லை; பாரபட்சத்தால் பாதிக்கப்படாமல் இல்லை! அத்தனையையும் எதிர்கொண்டு சாதித்து வருகிறோம் என்பதுதான் நம் பெருமை!  இன்றைக்கு மக்களின் பேராதரவோடு, கருத்தியல் களத்திலும், தேர்தல் களத்திலும் தொடர் வெற்றிகளைக் குவித்து, எதிரிகளின் கனவுகளைத் தவிடுபொடி ஆக்கி வருகிறோம்.

திராவிட மாடல் எனும் பாதுகாப்பு வளையம் அமைதி, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், முற்போக்குச் சிந்தனை, முன்னேற்றப் பாதை, கல்வி வளர்ச்சி எனத் தமிழ்நாட்டை இந்திய அளவில் முன்னணி மாநிலமாக மாற்றி வருகிறது.  வெறும் கொண்டாட்ட நிகழ்வாக இருந்த பொங்கல் திருநாளைப் பண்பாட்டுப் படைக்கலனாகவுமே மாற்றிப் பண்படுத்திய இயக்கத்தின் வழிவந்த அரசு நமது அரசு.  ஒற்றுமையோடும், வரலாற்று ஓர்மையோடும் நாம் ஒன்றிணைந்து நிற்கும் வரை தமிழ்நாட்டின் தனித்துவமும் மகத்துவமும் இந்திய ஒன்றியத்தில் தொடர்ந்து மின்னிடும்.

'எழில் திராவிடம் எழுக!' என்று எழுபதாண்டுகளுக்கு முன் முழங்கினார் தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணா! அத்தகைய எழுச்சியை இன்றைய திராவிட மாடல் அரசு உருவாக்கியுள்ளது. அவ்வெழுச்சி எந்நாளும் தொடர, தமிழ்நாடு எல்லா நிலையிலும் ஏற்றம் பெற உழைப்போம்! உள்ளமெங்கும் இல்லமெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும், தங்கட்டும்!

“உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது

 எழுவாரை எல்லாம் பொறுத்து”

என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, உழுதொழில் செய்வாரே உலகத்தாருக்கு அச்சாணி ஆவார்.  இதை உணர்ந்த நமது அரசு, “உழவுத் தொழில் போற்றுதும்; உழவரைப் போற்றுதும்!” என்ற அடிப்படையில், உழவர்களின் மலர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் தொடர்ந்து  துணை நிற்கும். இச்சிறப்புமிகு நன்னாளில் விவசாய பெருங்குடி மக்கள் அனைவரையும் வாழ்த்தி வணங்குவோம்.   

               அனைவருக்கும் எனது உளம் நிறைந்த பொங்கல் - தமிழர் திருநாள் - திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள்!

ஆளுநர் ஆர்.என்.இரவி

இந்த பொங்கல் திருநாளில், அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள தமிழ் சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நாம் அறுவடையை கொண்டாடி, பூமித்தாயின் அளவற்ற ஆசீர்வாதங்களுக்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பழங்கால மரபுகளில் வேரூன்றி, உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, நமது வளமான ஆன்மிக மற்றும் கலாசார பாரம்பரியத்தை பிரதிபலிப்பதுடன், பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பேணும் பக்தியில் நம்மை ஒன்றிணைக்கிறது. பொங்கல் உணர்வு அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளத்தை ஊக்குவிக்கட்டும், மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியால் நம் வாழ்க்கையை வளப்படுத்தட்டும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

உழைப்பின் அறுவடைத் திருநாளான பொங்கல் விழா மட்டுமல்ல; உண்மையான தமிழ்ப் புத்தாண்டு தொடக்கமும் ஆகும்!
பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி தழைத்தோங்கும் தமிழர்தம் புத்தாக்கமாகவும் இவ்வாண்டு அமையட்டும்!
அனைவருக்கும் புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துகள்!

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் 

தமிழர் பண்பாட்டுத் திருநாளான பொங்கல்  பெருநாளில் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் இராமதாசு

உலகெங்கும் வாழும் தமிழர்களின் அறுவடைத் திருநாளான தைப்பொங்கல் விழாவையும் தமிழ் புத்தாண்டையும் கொண்டாடும் தமிழ்ச் சொந்தங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 ‘தமிழர் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்ற நாமக்கல் கவிஞரின் வார்த்தைகளுக்கேற்ப தமிழர்களின் பெருமைமிகு தனிச்சிறப்புகளில் ஒன்று தான் தைப்பொங்கல் திருநாள் ஆகும். அதனால் தான் இத்திருநாளுக்கு தமிழர் திருநாள் என்ற பெயர் உருவானது. அதுமட்டுமின்றி, மதங்களைக் கடந்த திருநாள் என்ற பெருமையும் பொங்கலுக்கு உண்டு. இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இத்திருநாளில் தமிழர்கள் வீடுகளில் தோரணம் கட்டி, புத்தாடை அணிந்து, புது நெல் குத்தி, புதுப் பானையில் பொங்கலிட்டு  மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள்.

உலகில் இயற்கையை கொண்டாடும் ஒரே இனம் தமிழினம் தான். வாழ்க்கைக்கும், முன்னேற்றத்திற்கும்  உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் இனமும் தமிழினம் தான். குறிப்பாக உழவுக்கு துணை நிற்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் பெரும் பொங்கல் நாளுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் என்ற விழாவை நடத்தி, அதில் மாடுகளை அலங்கரித்து விருந்து படைப்பது வழக்கம். இந்த உன்னத செயல்களுக்கும் தமிழர்கள் பயன்படுத்திய கருவி தான் பொங்கல் ஆகும். உழைப்பாளிகளுக்கும் கொண்டாட்டங்கள் தேவை என்பதை உலகிற்கு உணர்த்தும் திருநாள் தைப்பொங்கல் ஆகும். அந்த வகையில் அது சிறப்பானது.

தமிழ்நாட்டை பீடித்திருக்கும் அனைத்து தீமைகளும் விலக வேண்டும். அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், நன்மை, அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம், சமூகநீதி ஆகியவை செழிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக, தமிழர்களின் வாழ்க்கையில் தைத்திருநாளும், தமிழ்ப் புத்தாண்டும் எல்லா நன்மைகளையும் வழங்கட்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன்

தமிழர் திருநாளான பொங்கல் விழா கொண்டாடும் தமிழ் கூறும் நல்லுலக மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாடிநத்துக்கள்!

உள்ளும் புறமும் ஒன்றாக இருந்து, நல்லிணக்கம் பேணும் மக்களாகத் திகழ்ந்து, அன்பும் அறனும் இன்பமும் ஏற்றமும் எங்கும் படர வாழ்த்துவோம்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ

உலகத்தின் மிகப் பழமையான நாகரிகத்தைக் கொண்ட தமிழர்கள், உழவுத் தொழிலைப் போற்றி, எருதுகள், கால்நடைகளுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கின்ற வகையில், அறுவடைத் திருநாளைத் தைப்பொங்கல் திருவிழாவாக நெடுங்காலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இஞ்சி, மஞ்சள், கரும்புடன், புதுப்பானையில் புத்தரிசி இட்டுச் சர்க்கரைப் பொங்கல் படைத்துப் பெற்றோரோடும் இல்லத்து அரசியோடும், மக்கள் செல்வங்களோடும் ‘பொங்கலோ பொங்கல்’ என்று குதூகலத்தோடு குலவையிட்டு மகிழ்கின்ற நாள்தான் தைத்திருநாள் ஆகும்.

‘உலகத்தாருக்கே அச்சாணி’ என வள்ளுவப் பெருந்தகையால் வருணிக்கப்பட்ட உழவர்களின் வாழ்வில் எண்ணற்ற இன்னல்கள் சூழ்ந்து விட்டன. நீர்நிலைகள், ஏரி, குளங்கள் காணாமல் போய்விட்டன. நீர் வரத்து பாதிக்கப்பட்டு விட்டது. இந்தத் துயரத்தில் இருந்து விவசாயிகள் விடுபட வேண்டும். காவிரி உள்ளிட்ட தமிழகத்தின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் விவசாயிகள், மகளிர், மாணவர் அனைவர் நலனையும் காக்கின்ற  தொலைநோக்குப் பார்வையோடு முதலமைச்சர் ஆருயிர் சகோதரர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் இந்தியாவின் பிற மாநிலங்கள் எலலாம் தமிழ்நாட்டைப் பின்பற்றுகின்ற வகையில் திராவிட மாடல்  ஆட்சியில் பொன் முத்திரையை பதித்து வருகிறார். இந்துத்துவா சக்திகளையும், சனாதனக் கூட்டங்களையும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் பூமியில் அடியோடு முறியடிப்போம்.

உலகம் முழுமையும் கொண்டாடி மகிழ்கின்ற தமிழ்க்குடி மக்கள், ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்

உலகெங்கும் வாழ்ந்து வரும் தமிழ் சமூகம் உழைப்பைப் போற்றும் உன்னத திருநாளாக தை முதல் நாளை வழி, வழியாக கொண்டாடி வருகிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்துறை தமிழறிஞர் ஒன்று கூடி, “தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு” என ஆய்ந்தறிந்து அறிவித்ததை ஏற்று, தமிழ் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகிறது.

இயற்கை சார்ந்து வாழ்ந்த மனித குலம், பயிர் சாகுபடி செய்யும் நிலைக்கு வளர்ந்து, உழவுத் தொழில் வாழ்க்கை முறையை எட்டிய நாள் முதலாக இயற்கை சூழலுக்கு பொங்கலிட்டு குறிப்பாக சூரியனை வழிபட்டு, குதூகலித்து வருகின்றது. மனித உழைப்புக்கு உதவி, உற்பத்தி பெருக்க உதவிய கால்நடைகளையும் வணங்கி மகிழும் “மாட்டு பொங்கலும்” தொடர்ந்து வருகிறது.

பெண்களும், குழந்தைகளும் கன்னியர்களோடு சேர்ந்து கும்மியடித்து கொண்டாடும் “காணும் பொங்கலும்”, தின் தோள் திறன் படைத்த இளைஞர்கள் “ஜல்லி கட்டில்” இறங்கி முரட்டுக்காளைகளை அடக்கி, வெல்லும் வீர விளையாட்டுகளும் தொடர்கின்றன.

இயற்கை பேரிடர்களின் தொடரும் தாக்குதலில் நிலைகுலைந்து போகும் வாழ்க்கை, புத்துயிர் பெற்று, வீறு கொண்டு முன்னேறும் என “தை பிறந்தால், வழி பிறக்கும்” என்று தன்னம்பிக்கை தரும் “தை” பொங்கல் தமிழர் பண்பாட்டு திருவிழா சாதி, மத, இன வேறுபாடுகள் இல்லாது உழைக்கும் மக்கள் அனைவரும் இணைந்து காணும் இன்பத் திருவிழாவாக தொன்மைக் காலம் தொட்டு தொடர்கிறது.

சாதிவெறி, மதவெறி, மொழிவெறி, இனவெறி என வெறுப்பு வளர்க்கும் அரசியலுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்று உறுதி காட்டி, கடந்த ஆண்டில் அரசியல் களத்தில் நூறு சதவீதம் வெற்றி கண்டோம்.

இயற்கை பேரிடர் மாறி, மாறி தாக்கிய போதும், ஒன்றிய அரசு வன்மம் காட்டி, வஞ்சித்து வரும் நிலையிலும் உழைக்கும் மக்களின் ஆதரவோடு தமிழ்நாடு முன்னேறி வரும் பெருமை கொள்கிறோம்.

ஆனால், சமூகத்தின் செல்வ உற்பத்தியின் உயிர் நாடியான தொழிலாளர்களின் ஊதிய அளவு ஆண்டுக்கு, ஆண்டு சரிந்து, வீழ்ச்சி கண்டு வருவதும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உறுதியளிப்பு இல்லாததால் உழவர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தரவுகளின் ஆதாரத்துடன் ஆய்வுகள் கூறுகின்றன.

இருநூறு ஆண்டுகள் தொடர்ந்த நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முன்னோர்கள் வளர்த்து வழங்கிய “வேற்றுமையில் ஒற்றுமை” நல் மரபையும், மதச்சார்பற்ற பண்பையும் அடித்தளமாக கொண்டு இயங்கி வரும் அரசியலமைப்பு சட்டத்தை சிதைத்து, அழித்தொழித்து விட்டு, அந்த இடத்தில், வழக்கொழிந்து போகும் “மனுதர்ம” விதிமுறைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த ஆர்எஸ்எஸ் பரிவார் கும்பல்கள் வெறி பிடித்து அலைகின்றன.

சமய வேறுபாடுகளையும், சனாதனக் கருத்தியலால் கட்டமைக்கப்பட்ட படிநிலை சாதிய சமூக வேறுபாடுகளையும் பயன்படுத்தி, மதவெறி ஆதிக்க சக்திகள் அரசியல் அதிகாரத்தில் தொடரும் பேராபத்தை உணர்ந்து, அதனை அதிகாரத்திலிருந்தும், சமூக வாழ்வில் இருந்தும் வெளியேற்ற தைத் திருநாளில் உறுதி ஏற்போம்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” மற்றும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற தமிழ் சமூகத்தின் கனவுகளை நனவாக்க, அறிவியல் கருத்துக்களையும், சமூகநீதி ஜனநாயக கொள்கைகளையும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உயர்த்தி பிடித்து, சோசலிச திசைவழியில் பயணிக்க வேண்டும் என்ற விழைவோடு உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் புவிப் பரப்பெங்கும் விரிந்து, பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். உலகமெங்கும் அறுவடையின் துவக்கம் பல்வேறு வடிவங்களில் விழாக்களாக கொண்டாடப்படுகின்றன. உழவை, உழவர்களை, உழைப்பை, இயற்கையை கொண்டாடுகிற விழாவாக பொங்கல் திருநாள் தமிழ் மக்களால் வரலாற்றுக் காலம் தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று பேசும் திருக்குறள் “உழவே தலை” என்று உழவுத் தொழிலை தலைமேல் வைத்து கொண்டாடுகிறது. ஒன்றிய பாஜக கூட்டணி அரசு வேளாண் திருத்த சட்டங்கள் மூலம் உழவுத் தொழிலை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கைமாற்றி விட முயன்றதை எதிர்த்து ஏர் முனை நடத்திய போர் முனையால் இந்திய விவசாயம் தற்காலிகமாக காப்பாற்றப்பட்ட போதும், இன்னமும் அந்த ஆபத்து நீங்கி விடவில்லை. விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் பாதுகாப்பதற்கான பரந்துபட்ட போராட்டங்களை பல முனைகளில் தொடர்ந்து நடத்திட வேண்டியுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் திருநாள் சமத்துவ பொங்கலாகவே கொண்டாடப்படுகிறது. சாதி, மதம், இனம் கடந்து மக்களின் ஒற்றுமையை பறைசாற்றுவதாக பொங்கல் திருநாள் விளங்குகிறது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிற பொதுவுடைமை சமூகத்தை சமைத்திட, இந்த பொங்கல் திருநாளில் உறுதியேற்போம். வண்ணங்கள் இணைகிற போதுதான் வாசலில் போடப்படுகிற கோலம் அழகாகிறது. அதேபோல பல்வேறு மதங்களை பின்பற்றுகிற, பல்வேறு மொழிகள் பேசுகிற, பல்வேறு பண்பாடுகளை கொண்டுள்ள பன்முகத்தன்மையே இந்தியாவின் பேரழகாகும். ஆனால் இந்த பன்முகத்தன்மையை அழித்து ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு எனத் துவங்கி இப்போது ஒரு நாடு, ஒரே தேர்தல் என்கிற அளவுக்கு செல்கிறது ஆர்எஸ்எஸ் பரிவாரத்தால் இயக்கப்படும் ஒன்றிய அரசு. இத்தகைய சதித்திட்டங்களை முறியடித்து இந்திய மக்களின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டியது மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளின் மகத்தான கடமைகளில் ஒன்றாக முன் நிற்கிறது. ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற திருக்குறள் உணவை பகிர்ந்துண்பது குறித்து மட்டும் பேசவில்லை. உலகின் பல்லுயிர் பெருக்கத்தையும், சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. ஆனால் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் அரிட்டாபட்டி பகுதியில் பல்லுயிர் பகுதியை அழித்து, பண்பாட்டு சின்னங்களை சிதைத்து, கார்ப்பரேட் கொள்ளையர்களின் லாபவெறிக்கு விருந்தாக்க முயன்ற ஒன்றிய அரசை எதிர்த்து மக்களின் எழுச்சிமிக்க போராட்டங்கள் நம்பிக்கை கொள்ள வைக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் விளைச்சலாக விளைந்த மதச்சார்பற்ற, ஜனநாயக, கூட்டாட்சி கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட நம்நாட்டின் அரசியல் சட்டத்தை அகற்றி விட்டு அந்த இடத்தில் பிறப்பால் பேதம் கற்பிக்கிற மநு அதர்மம் உள்ளிட்ட கடந்த கால அழுக்குகளை இந்தியாவின் அரசியல் சட்டமாக மாற்ற ஒன்றிய பாஜக கூட்டணி ஆட்சி முயல்வதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. வெப்பம் அதிகரிக்கும் போது உலைப்பானை கொதிப்பதை போல  கொடுமைகளை எதிர்த்து கொதித்தெழும் மக்கள் போராட்டங்கள் வெடித்தே தீரும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முதுமொழி. பிறந்திருக்கும் தை அனைத்துப் பகுதி மக்களின் நல்வாழ்விற்கான வழிகளை திறந்துவிடும் என்கிற நம்பிக்கையோடு அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.


தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்

உலகத்தமிழர்கள் அனைவருக்கும் தமிழர் புத்தாண்டு, தமிழர் திருநாள் வாழ்த்துகள் : தத்துவம், அரசியல், பொருளியல், பண்பியல், சூழலியல் என அனைத்து துறையிலும் தமிழ் தேசிய உரிமைப் போராட்டங்கள், வெகுமக்கள் போராட்டங்களாக – சனநாயகப் போராட்டங்களாக வீச்சுப் பெற உறுதி ஏற்போம்.

தமிழ்நாட்டில் தமிழறிஞர்கள் தமிழரின் வீரத்தை -அறத்தை - முற்போக்குக் கருத்துகளை விதைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். தமிழர் திருநாள் என்று பொங்கல் திருவிழாவுக்குப் பெயர் சூட்டுவதற்கு முயற்சி எடுத்தவர்கள் அவர்களே. 1921 ஆம் ஆண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில், தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழறிஞர் பெருமக்கள் ஒன்று கூடி, தமிழர் ஆண்டு முறையை உருவாக்கினார்கள்.

யாருடைய பெயரால் உருவாக்குவது என ஆராய்ந்து, திருவள்ளுவப் பேராசான் பெயரால் உருவாக்கினார்கள். இந்தத் திருவள்ளுவர் தொடர் ஆண்டுக் கணக்கை 1970-களில், முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டது. அதே போன்று, 1937ஆம் ஆண்டு, திருச்சியில் நடைபெற்ற அனைத்துத் தமிழர் மாநாட்டில், பொங்கல் விழாவை தமிழர் திருநாளாகக் கடைபிடிக்க முடிவெடுத்தார்கள்.

அதன்படி, சாதி, மத, இன வேறுபாடு எதுவுமின்றி, உழைப்பைத் தந்து உதவியவர்களையும் எண்ணி உழவர் பெருங்குடி மக்கள் நன்றி தெரிவித்து வணங்கி மகிழும் இனிய திருவிழாவாக, மனித நேயம் வளர்க்கும் தமிழ்ச் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டினை உலகுக்கு உணர்த்திடும் மகத்தான திருவிழாவாக தைப் பொங்கல் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டிலும், தமிழ் ஈழத்திலும், உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள், தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை மகிழ்வோடு இன்று கொண்டாடி வருகின்றனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கிணங்க தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாகவும் இந்த தமிழ்ப் புத்தாண்டு அமைந்துள்ளது.

திமுக தலைமையிலான அரசில் பங்கு வகித்து வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விவசாயப் பெருங்குடி மக்களின் நலமும் வளமும் கருதி, பல்வேறு சிறப்பு திட்டங்களை பெற வலியுறுத்தவதோடு, விவசாயிகளுக்கு அரணாக நிற்கும்.

கொலை, கொள்ளை, அநீதிக்கு எதிராக, மதுவுக்கு எதிராக, தீண்டாமைக்கு எதிராக, நிலவள சுரண்டல், கனிமவள கொள்ளைகளுக்கு எதிராக , பாலியல் வன்கொடுமைகள், பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக, ஊழல், லஞ்சத்திற்கு எதிராக, எவ்வித சமரசமின்றி தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராடும்.

இந்திய ஏகாதிபத்தியம் – தான் பறித்த உரிமைகளை விட்டுக் கொடுக்காது. இந்திய ஏகாதிபத்தியத்தின் இருபெரும் கட்சிகள் பா.ஜ.க. இவை “பாரதமாதா”வின் பிள்ளை; தமிழன்னையின் பகைவர்.

தமிழ்த்தேசிய உரிமைகள் மீட்பு – கோடிக்கணக்கான தமிழர்களின் எழுச்சியில்தான் கைகூடும்! அதற்குத் தமிழ்த்தேசியம் என்றால் என்ன, இழந்த உரிமைகள் எவை, அவற்றை எப்படி மீட்பது, அதற்கான வெகுமக்கள் போராட்ட உத்திகள் யாவை என்பவற்றையெல்லாம், தமிழ்த்தேசிய தலைவர்கள், ஜனநாயக சக்திகள் கற்றறிய வேண்டும். அவற்றை மக்களின் குரலாக மாற்ற வேண்டும்.

தத்துவம், அரசியல், பொருளியல், பண்பியல், சூழலியல் என அனைத்துத் துறையிலும் தமிழ்த்தேசிய உரிமைப் போராட்டங்கள், வெகுமக்கள் போராட்டங்களாக – சனநாயகப் போராட்டங்களாக வீச்சுப் பெற,  தமிழர் புத்தாண்டு, தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்.

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்றும், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றும் 2,500 ஆண்டுகளுக்கு மேல் மனித சமத்துவம் பேசி வரும் இனம் – தமிழினம்! ஆரியத்தின் வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்துவரும் இனம் – தமிழினம்!

அதன்படி, நம் முன்னோர்களின் வழியில் நின்று, பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சனாதனக் சக்திகள் பரப்பி வரும், சாதிய படிநிலைகளையும், சாதிய சமூக வேறுபாடுகளையும், மதவெறி அரசியலையும் புறம் தள்ளுவோம்!

தமிழர்களாய் ஒன்று திரள்வோம் என்று கூறிக்கொண்டு, தமிழ்நாட்டு தமிழர்கள், ஈழத்தமிழர்கள், உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.