இயக்குநர் மிஷ்கின் - பாடலாசிரியர் உமாதேவி 
செய்திகள்

சர்ச்சை பேச்சு: மிஷ்கினுக்கு பெண் பாடலாசிரியர் கண்டனம்!

Staff Writer

பாட்டல் ராதா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குநர் மிஷ்கினுக்கு பாடலாசிரியர் உமாதேவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாட்டல் ராதா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. விழா மேடையில் வெற்றிமாறன், மிஷ்கின், லிங்குசாமி, அமீர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் படத்தில் பணியாற்றியுள்ள பாடலாசிரியர் உமா தேவி, நடிகை சஞ்சனா நடராஜன் ஆகியோரும் மேடையில் இருந்தனர்.

நிகழ்வில் பேசிய இயக்குநர் மிஷ்கின் குடியை ஆதரித்து பேசியதோடு ஆபாசமாகப் பேசியது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. மிஷ்கினின் இந்த பொறுப்பற்ற பேச்சு சமூக ஊடகத்தில் வைரலானது.

இந்த நிலையில், மிஷ்கினின் பேச்சுக்கு பாடலாசிரியர் உமாதேவி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“பாட்டல் ராதா திரைப்படத்தின் நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின் படம் குறித்துப் பாராட்டிப் பேசிய நிறைய விஷயங்களை கைதட்டி ரசித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால், திடீரென்று அவருடைய தரம் தாழ்ந்த வார்த்தைப் பிரயோகங்களைக் கேட்டு மேடையில் மிகுந்த தர்மசங்கடத்திற்குள்ளானேன். ஒரு கட்டத்தில் எழுந்து போய்விடலாம் என்று கூட நினைத்தேன். ஆனால், படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் எனது நடவடிக்கை பத்திரிகை – ஊடகங்களில் பேசுபொருளாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே எதிர்வினையாற்றாமல் என்னை நான் அமைதியாக இருத்திக் கொண்டேன். அவரின் மேடை நாகரிகமற்ற, அருவருக்கத்தக்கச் சொல்லாடல்களுக்கு எனது வன்மையான கண்டனங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.