கூலி திரைப்படத்தில் தனது பெயரில் உருவாகியுள்ள மோனிகா பாடல், தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக இத்தாலி நடிகை மோனிகா பெலூச்சி கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மோனிகா பெலூச்சியின் இந்தப் பாராட்டால், இப்பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை பூஜா ஹெக்டே மனம் மகிழ்ந்துள்ளார். தனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு இது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பூஜா ஹெக்டே கூறுகையில், “மோனிகா பெலூச்சி கூறிய இந்த வார்த்தைகள் எனக்கு கிடைத்த பாராட்டுகளிலேயே முக்கியம் வாய்ந்தது.
எனக்கு மோனிகா பெலூச்சியை மிகவும் பிடிக்கும். அவர் தனது தனித்த ஆளுமையால் அடையாளப்படுத்தப்படுபவர். அவர் தனக்கென தனித்த ஸ்டைல், தனித்த குரல் வளத்தை கொண்டவர். அவரிடமிருந்து பாராட்டை பெறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அமீர்கான், நாகார்ஜூனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சவுபின் ஷாயிர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சன்பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டேவின் சிறப்பு நடனத்தில் அண்மையில் வெளியான ‘மோனிகா’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் டிரெய்லரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.