கைது செய்யப்பட்ட பங்கஜ் சர்மா 
செய்திகள்

கடலூர் விபத்து: கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது!

Staff Writer

கடலூர் ரயில் விபத்து சம்பவத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில், சின்ன காட்டு சாகை சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த திராவிட மணி மகள் சாருமதி (16), மகன் செழியன்(15) மற்றும் மாணவர் விமலேஷ்(10) ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும், ஓட்டுநர் சங்கர்(47), விஷ்வேஸ் (16), நிவாஸ்(13) ஆகியோர் மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், ரயில் வருவது தெரிந்தும் வேன் டிரைவர் கூறியதை கேட்டு ரயில்வே கேட்டை திறந்ததே விபத்துக்கு காரணம் என தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது. மேலும், செம்மங்குப்பம் லெவல் கிராசிங்கில் ரயில்வே கேட்டை உரிய நேரத்தில் மூடாத கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதையடுத்து, தமிழக காவல்துறை தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.