இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பேசப்படாத மொழியான சமஸ்கிருதத்துக்கு மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவையின் நடவடிக்கைகள் சமஸ்கிருதம் உட்பட 22 மொழிகளில் கிடைக்கும் என இன்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கும் விதமாக கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன், “மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழிகளில் அவை நடவடிக்கைகளை மொழிபெயர்த்துக் கொடுப்பதை வரவேற்கிறோம். சமஸ்கிருதம் எந்த மாநிலத்தில் அலுவல் மொழியாக உள்ளது என்று சொல்ல முடியுமா? தொடர்பு மொழியாக இல்லாத ஒரு மொழிக்கு மக்களின் வரிப்பணத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்? இந்தியாவில் எந்த மாநிலத்திலும் சமஸ்கிருதம் பேசப்படுவதில்லை.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 24,821 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுகிறார்கள். நிலைமை இப்படி இருக்கும்போது, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை வளர்ப்பதற்கு வரி செலுத்துவோரின் பணம் ஏன் வீணடிக்கப்பட வேண்டும்?” என அவர் கேள்வி எழுப்பினார்.