சின்மயி - வைரமுத்து 
செய்திகள்

“வைரமுத்து குறித்து என்னிடம் தான் கேட்கணுமா..?” - டென்ஷனான சின்மயி!

Staff Writer

தேசிய விருது அறிவிப்பில் அதிருப்தி இருக்கிறது என கவிஞர் வைரமுத்து சமீபத்தில் தெரிவித்திருந்த கருத்து குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பாடகி சின்மயி கோபமுடன் பதிலளித்தார்.

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற பாடகியாக வலம் வருபவர் சின்மயி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் தெரிவித்தார். வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது திரையுலகில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திருவான்மியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த மார்பக புற்றுநோய் மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மார்பக புற்றுநோய் துறை பேராசிரியர் ராஜசுந்தரம், பின்னணிப் பாடகி சின்மயி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாடகி சின்மயி, ”சமீபத்தில் தூய்மைப் பணியாளர்கள் அவர்களின் பல்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில், நான் 500 லிட்டர் தண்ணீர் பாட்டில்களை அவர்களுக்கு கொண்டு சென்றேன். ஏனெனில் அதில் பல்வேறு விதமான பெண்கள் வெகுநேரம் வெயிலில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பிரச்சனை என்ன என்பதை அரசு கேட்டு அதற்குரிய வழியில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாக உள்ளது" என்றார்.

அதனைத்தொடர்ந்து, பாடலாசிரியர் வைரமுத்து சமீபத்தில், "தேசிய விருது அறிவிப்பில் அரசியல் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் அதிருப்தி இருக்கிறது" என்று கருத்து தெரிவித்திருந்தது குறித்து பெண் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். உடனே கோபத்தில் முகம் சிவந்த சின்மயி, "அவர் என்ன கூறினால் எனக்கென்ன? அவர் பேசியதை பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது.

தூய்மைப் பணியாளர்கள் பிரச்சனை இருக்கிறது, என்னை டப்பிங் யூனியன் இருந்து நீக்கி கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறித்து நடிகை ஊர்வசி தேர்வுக்குழுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனை பற்றி எல்லாம் கேள்வி கேட்காமல், வைரமுத்து பற்றி என்னிடம் கேள்வி கேட்பதால் உங்களுக்கு என்ன பலன்? ஒரு பெண் செய்தியாளராக இருந்து கொண்டு நீங்கள் இவ்வாறு என்னிடம் கேட்கலாமா?

நான் ஏதாவது கோவப்பட்டு பேசினால் வைரமுத்து பற்றி சீறினார் சின்மயி என எதுகை மோனையில் தலைப்பு வைக்க உங்களுக்கு நன்றாக இருக்கும் என்பதால் இப்படி கேள்வி கேட்கிறீர்களா? என்று” ஆவேசமாக பதிலளித்தார்.