பாஜக உடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா கூறவில்லை என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், பாஜகவுடனான கூட்டணியில் அதிகாரத்திலும் பங்களிக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்தபோது, “கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்று கூறினோம்; கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை; நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு ஏன் எரிச்சல்? திமுகவுக்கு பயம். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷாவும் கூறவில்லை; டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என்று அமித் ஷா கூறினார். பாஜக - அதிமுக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்றே அமித் ஷா குறிப்பிட்டார். பாஜக உடனான கூட்டணி என்பது திமுகவிற்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்கானது மட்டுமே. பாஜகவுடன் கூட்டணி மட்டுமே கூட்டணி ஆட்சி கிடையாது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளதால் அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேரும்” எனவும் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.