தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 
செய்திகள்

‘என்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம்!’ - விஜய்

Staff Writer

என்னை இளைய காமராசர் என அழைக்க வேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக விருது வழங்கிப் பாராட்டி வருகிறார்.

முதல்கட்டமாக மே 30, இரண்டாம் கட்டமாக ஜூன் 4 பரிசளிப்பு விழா நடைபெற்ற நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் இன்று மூன்றாம் கட்ட நிகழ்வு நடைபெறுகிறது.

இந்த நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய், குஜராத் விபத்தின் புகைப்படங்கள், வீடியோக்களை பார்ப்பதற்கு மனம் பதறுகிறது, அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, குஜராத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து, மீண்டும் பெற்றோர்கள், மாணவர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய், தன்னை காமராஜர், இளைய காமராஜர் என்று அழைக்க வேண்டாம். 2026 தேர்தல், அரசியல் பற்றியெல்லாம் இந்த மேடையில் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

மேலும், தங்களின் பள்ளி, ஆசிரியர்கள் பற்றி பேசுங்கள் என்று கோரிக்கை வைத்தார்.