எடப்பாடி பழனிசாமி 
செய்திகள்

தனிப்பட்ட பிரச்னைகள் கூடாது: அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி எச்சரிக்கை!

Staff Writer

தனிப்பட்ட பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டக்கூடாது என்று அதிமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது. இந்தநிலையில், அமைப்பு ரீதியிலான 82 மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காணொளி காட்சி மூலமாக ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணை பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும், பூத் கமிட்டியை விரைவாக அமைத்து தலைமைக்கு அனுப்ப வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியாக தெரிகிறது. மேலும், மாவட்ட செயலாளர்களிடம் அவர்களுடைய மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள், குறித்தும் கேட்டறிந்தார்.

இந்தக் கூட்டத்தில் திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டக்கூடாது என இபிஎஸ் எச்சரித்துள்ளார்.

மேலும், கூட்டணி விவகாரம் குறித்தும் யாருடனும் விவாதிக்கக்கூடாது, கூட்டணி குறித்து தலைமை பார்த்துக் கொள்ளும், கூட்டணி குறித்து தலைமை முடிவெடுக்கும் எனச் சொல்லி விடுங்கள், கருத்து வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.