நடிகர் அஜித்குமார் 
செய்திகள்

துபாய் கார் ரேஸ்: அஜித்குமாருக்கு எடப்பாடி, ரஜினிகாந்த் வாழ்த்து!

Staff Writer

துபாய் கார் ரேஸில் மூன்றாவது இடத்தை பிடித்த அஜித்குமாருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் உட்பட அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

துபாயில் நடந்த 24H கார் பந்தயத்தில் 991 பிரிவில் நடிகர் அஜித்தின் 'அஜித்குமார் ரேசிங்' அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித்குமார், இந்திய தேசியக்கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த கார் பந்தயத்தில் பங்கேற்க தயாராகி வந்த அஜித் கடைசி நேரத்தில் பந்தயத்திலிருந்து விலகிக் கொண்டார். எனினும், அவரது அணி பங்கேற்று வெற்றி பெற்றது.

இதையடுத்து திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும், ரசிகர்களும் அஜித் குமாருக்கு சமூக ஊடகத்தில் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அஜித்குமாருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “துபாயில் நடைபெற்ற 24HSeries கார் பந்தயத்தில் 3வது இடத்தைப் பிடித்துள்ள முன்னணி நடிகர், அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்கள் தலைமையிலான அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!.

மேலும் பல வெற்றிகளைக் குவித்து, நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மேன்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன். ” என சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "என் அன்பான அஜித்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள். நீங்கள் சாதனை செய்துள்ளீர்கள், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.