செய்திகள்

டெல்லியில் நிலநடுக்கம்: மக்கள் அமைதியாக இருக்க பிரதமர் மோடி அறிவுரை!

Staff Writer

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய நில அதிர்வும் ஏற்பட்டது.

இதையடுத்து டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

இன்று அதிகாலை 5.36 மணி அளவில் டெல்லி மற்றும் என்.சி.ஆர்-இன் சில பகுதிகளில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதமோ அல்லது காயமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

இந்த நிலையில், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அனைவரும் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் வலியுறுத்துகிறேன். சாத்தியமான நில அதிர்வுகளுக்கு எச்சரிக்கையாக இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன். அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்," என்று குறிப்பிட்டுள்ளார்.