அதிமுக - பாஜக கூட்டணியில் தவெகவும் இணைய வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக - பாஜக கூட்டணியும் முடிவாகியுள்ள நிலையில், நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை தனித்துப் போட்டிட முடிவெடுத்துள்ளன. இதனால், தமிழகப் பேரவைத் தேர்தலில் கிட்டத்தட்ட மும்முனை அல்லது நான்கு முனை போட்டி நிலவுகிறது.
திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் திட்டவட்டமாக கூறிவரும் நிலையில், அவர் அதிமுக – பாஜக கூட்டணிக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
அதே வேளையில், தமிழக வெற்றிக் கழத்தின் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணையுமா? என்பது குறித்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தனியார் செய்தி நிறுவனத்துக்கு பதிலளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில், “அதிமுக-பாஜக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகமும் இணைய வேண்டும். ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் வரலாம். இது தவெகவுக்கும் பொருந்தும். இருப்பினும், தவெகவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
“பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்திருக்கும் யாரையும் நாங்கள் எங்களோடு சேர்த்துக் கொள்ளமாட்டோம்.” என்று தவெக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் கடந்த 18ஆம் தேதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.