செய்திகள்

அங்கன்வாடியில் இனி முட்டை பிரியாணி... 3 வயது சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அரசு!

Staff Writer

கேரளாவை சேர்ந்த சிறுவன் அங்கன்வாடியில் வழங்கப்படும் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி வழங்க வேண்டுமென வீடியோ மூலம் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கேரள அரசு இனி அங்கன்வாடிகளில் முட்டை பிரியாணி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் மழலை மொழியில் சிறுவன் ஒருவன், ‘பிரியாணி தரணும்’ எனச் சொல்வார். அதற்கு அவரது அம்மா, ‘எங்கே’ எனக் கேட்பர். “அங்கன்வாடியில் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணியும் பொரிச்ச கோழியும் தரணும்” என சிறுவன் பதில் தந்திருப்பார். அதை வீடியோவாக பதிவு செய்த அவரது அம்மா சமூக ஊடகத்தில் பதிவிட, அது பலரது கவனத்தைப் பெற்றது. வைரல் வீடியோ அரசாங்கத்தின் பார்வை வரைச் சென்றது.

“அங்கன்வாடியில் வழங்கப்படும் உணவு குறித்து சிறுவன் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறோம். உணவை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்படும்” என கேரள மாநில அமைச்சர் வீணா ஜார்ஜ் அப்போது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று அங்கன்வாடி பள்ளிகளின் புதிய கல்வி ஆண்டு தொடக்க விழா பத்தனம்திட்டா மாவட்டத்தில் நடந்தது. அதில் அமைச்சர் வீணா ஜார்ஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நடப்பு கல்வி ஆண்டுக்கான அங்கன்வாடி பள்ளிகளின் உணவு அட்டவணையில் முட்டை பிரியாணியும், புலாவும் இடம்பெறும் என்றார்.

இது குறித்து மேலும் விவரித்துப் பேசிய அவர், “அங்கன்வாடிகளில் ஒருங்கிணைந்த உணவு மெனுவை அமல்படுத்துவது இதுவே முதன்முறை. இந்த உணவு அட்டவணையை பலகட்ட ஆலோசனைகளுக்குப் பின் அமல்படுத்துகிறோம். இதில் முட்டை பிரியாணி, புலாவ் சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தைகள் உணவில் அதிகளவு உப்பு, சர்க்கரை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கும் வகையில் இந்த உணவு மெனு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுவரை வாரத்துக்கு இரண்டு முறை வழங்கப்பட்ட முட்டை, பால் இனி வாரத்துக்கு மூன்று முறை வழங்கப்படும்.” என்றார்.