தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 
செய்திகள்

வாக்கு திருட்டு... ராகுலின் குற்றசாட்டுகளுக்கு தேர்தல் ஆணையர் விளக்கம்!

Staff Writer

“தேர்தல் ஆணையத்தைப் பொருத்தவரையில், அனைவரும் சமமே. யார் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராயினும் தேர்தல் ஆணையத்துக்கு அதுவொரு பொருட்டல்ல.” என்று தேர்தர் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையமும் பாஜகவும் சேர்ந்து வாக்குகளை திருடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்திருப்பதாவது:

"இந்திய அரசமைப்பின்படி, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் 18 வயது பூர்த்தியானபின், ஒரு வாக்காளராக மாறுவதுடன் கட்டாயம் வாக்கு செலுத்தவும் வேண்டும்.

சட்டத்தின்படி, ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்படுவதன் மூலமே அங்கீகரிக்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது, தேர்தல் ஆணையம் இதே அரசியல் கட்சிகளிடம் எப்படிப் பாகுபாடு காட்ட இயலும்? பாரபட்சத்துடன் செயல்பட முடியும்?

தேர்தல் ஆணையத்தைப் பொருத்தவரையில், அனைவரும் சமமே. யார் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராயினும் தேர்தல் ஆணையத்துக்கு அதுவொரு பொருட்டல்ல.

தேர்தல் ஆணையம் தமது அரசமைப்பு கடமையிலிருந்து பின்வாங்காது. தேர்தல் ஆணையத்தின் கதவுகள் ஒவ்வொருவருக்காகவும் எப்போதும் சமமாகவே திறக்கப்பட்டு இருக்கிறது. அடிமட்ட அளவில், அனைத்து வாக்காளர்களும், அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்து பூத் அளவிலான அலுவலர்களும், அதிகாரிகளும், ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனர். வெளிப்படையான முறையில் பணியாற்றி வருகிறோம்.

இந்தநிலையில், எங்களால் சரிபார்க்கப்பட்ட ஆவணங்கள் தங்களின் சொந்த அரசியல் கட்சிகளின் மாநில அளவிலான தேசிய அளவிலான தலைவர்களைச் சென்றடைவதில்லை என்பது மிக தீவிரமாகக் கருத்திற்கொள்ள வேண்டிய விஷயம். களத்தில் என்ன நடக்கிறது என்பதை புறந்தள்ளிவிட்டு குழப்பத்தை பரப்ப ஒரு முயற்சி இங்கு நடைபெறுகிறது.

பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்த நடவடிக்கையை முழு அளவில் வெற்றியடையச் செய்ய நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். பிகாரில் உள்ள 7 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்துடன் துணை நிற்கும்போது, தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை மீது எந்தவொரு கேள்விக்குறிக்கும் இடமில்லை; அதேபோல, வாக்காளர்களின் மீதான நம்பகத்தன்மை மீதும் சந்தேகத்திற்கு இடமில்லை” என்றார்.