செய்தியாளர் சந்திப்பில் எலான் மஸ்க், டிரம்ப் 
செய்திகள்

50 மில்லியன் டாலர் ஆணுறைகளா?... தப்பா சொல்லிட்டேன்: மஸ்க்

Staff Writer

அமெரிக்காவிலிருந்து காசாவிற்கு 50 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆணுறை அனுப்பியது தொடர்பாக தவறான தகவலைப் பரப்பிய டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், “நான் சொல்வதில் சில தவறுகள் இருக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.

காசாவிற்கு 50 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆணுறைகளை ஜோ பைடன் அரசு அனுப்பியதாக எலான் மஸ்க் கடந்த ஜனவரி 29ஆம் தேதி தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் எலான் மஸ்க் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எலான் மஸ்கிடம் செய்தியாளர் ஒருவர், “மிஸ்டர் மஸ்க், நீங்கள் எக்ஸ் தளத்தில் 50 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆணுறைகள் காசாவிற்கு அனுப்பப்பட்டதாக சொன்னீர்கள். ஆனால், அந்த ஆணுறைகள் மொசாம்பிக் நாட்டுக்கு அனுப்பப்பட்டன. இப்படி தவறாக செய்தி பரப்பலாமா?" என்று கேள்வி எழுப்பினார்.

‘நான் சொல்வதில் சில தவறுகள் இருக்கலாம். அதை சரி செய்ய வேண்டும்.’ என்பதை ஒப்புக் கொண்ட மஸ்க், “50 மில்லியன் டாலர் ஆணுறைகளை அனுப்ப வேண்டுமா என்று தெரியவில்லை. இது மிகப்பெரிய எண்ணிக்கையாகும்” என்றார்.

பாலஸ்தீனத்திலும் மொசாம்பிக்கிலும் ‘காசா’ என்ற பகுதி இருப்பதால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். மொசாம்பிக்கில் உள்ள காசாவில் எய்ட்ஸ் அதிகமாகப் பரவுவதால், இதை கட்டுப்படுத்தவே இவ்வளவு மதிப்புள்ள ஆணுறைகள் அனுப்பப்படுவதாக அமெரிக்காவின் சுகாதாரத்துறை மற்றும் மனித சேவைகள் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த செய்தியாளர் சந்திப்பின் போது எலான் மஸ்கின் இளைய மகன் ‘லிட்டில் எக்ஸ்’ அவரது கழுத்தில் அமர்ந்துகொண்டான். அவனை வைத்துக்கொண்டே மஸ்க் இயல்பாக பேட்டி அளித்த காட்சி அனைவரையும் ஈர்த்து வருகிறது.

எலான் மஸ்க், டொனால்டு டிரம்பின் அரசில் செயல்திறன் துறையில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.