எலான் மஸ்க் 
செய்திகள்

புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க்!

Staff Writer

டிரம்புடன் ஏற்பட்ட தொடர் மோதல் காரணமாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், 'அமெரிக்கா கட்சி' என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் ஆகிய இருவரும் முட்டி மோதிக்கொள்கிறார்கள்.

இதற்கு மிக முக்கிய காரணம், 'ஒன் பிக் அண்ட் பியூட்டிஃபுல் பில்' எனப்படும் வரி மசோதாதான்.

இந்த மசோதா குறித்து பேசப்பட்ட போதே, இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால், புதிய கட்சி தொடங்குவேன் எனக் கூறி, கட்சி தொடங்குவது குறித்து எக்ஸ் தளத்தில் போல் வைத்தார்.

அதில் 80.4 சதவிகித மக்கள் கட்சி தொடங்க வேண்டும் என்று வாக்களித்திருந்தார்கள்.

இந்த நிலையில், அமெரிக்க சுதந்திர தினமான கடந்த ஜூன் 4ஆம் தேதி தன்னுடைய எக்ஸ் தளத்தில், 'இரு கட்சிகளின் ஆட்சியில் இருந்து விடுபட வேண்டுமா... அமெரிக்கா கட்சியைத் தொடங்க வேண்டுமா' என்று எலான் மஸ்க் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு 65.4 சதவிகித மக்கள் 'ஆம்' என்று பதிலளித்திருந்தனர்.

இதனையடுத்து நேற்று தனது எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் பதிவிட்டிருப்பதாவது: "இரண்டில் ஒருவருக்கு, புதிய கட்சி தொடங்கப்பட வேண்டும். அது நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்!

நமது நாட்டை வீண் செலவு மற்றும் ஊழல் மூலம் திவாலாக்குவதைப் பார்க்கும் போது, நாம் ஒரு கட்சி முறையில் வாழ்கிறோம். ஜனநாயகத்தில் அல்ல.

இன்று, உங்களுக்கு உங்களது சுதந்திரத்தைத் தர, அமெரிக்கா கட்சி தொடங்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.