போலீஸ் என்கவுண்டர் 
செய்திகள்

மீண்டும் என்கவுண்டர்… மதுரையில் பிரபல ரவுடி சுட்டுக் கொலை!

Staff Writer

மதுரையில் இரு கொலை உட்பட 20 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சுபாஷ்சந்திரபோஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் சுபாஷ்சந்திரபோஸ். பிரபல ரவுடி வெள்ளை காளியின் கூட்டாளி. தி.மு.க. பிரமுகர் வி.கே.குருசாமி தரப்பைச் சேர்ந்த முனியசாமியை கொலை செய்வதற்கு பதிலாக ஆள்மாற்றி ரேஷன் கடை முனியசாமியை கொலை செய்தது, தல்லாகுளம் பகுதியில் நடந்த கொலை வழக்கு, இரு கஞ்சா வழக்கு, வழிப்பறி, கொள்ளை உட்பட 16 வழக்குகள் தென்மாவட்டங்களில் இவர் மீது உள்ளன.

சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனுார் டோல்கேட் அருகில் 48 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதாகி துாத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார். மார்ச் 19இல் ஜாமினில் வந்த இவரை, மதுரை நகர் போலீசார் பிடிவாரன்ட் வழக்கில் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை 6:00 மணியளவில் செக்போஸ்ட்டில் கார் ஒன்றை போலீசார் சோதனையிட நிறுத்தினர். கார் நிற்காமல் சென்றது. அவர்களை பின்தொடர்ந்து சென்று காரை மடக்கினர் போலீசார்.

காரிலிருந்த சுபாஷ்சந்திரபோஸை பிடிக்க முயன்றபோது வாளால் இரு போலீசாரை வெட்டினார். பின்னர் இன்ஸ்பெக்டர் பூமிநாதனை நோக்கி சுட்டதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனவே, தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர் பூமிநாதன் சுட்டத்தில் சுபாஷ்சந்திர போஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.