எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், அண்ணாமலை 
செய்திகள்

இப்போது தேர்தல் நடந்தாலும் திமுக கூட்டணியே வெல்லும்! - கருத்துக்கணிப்பு

Staff Writer

இன்றைய தேதியில், நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் அரசியல் கட்சிகளின் வாக்கு விழுக்காடு, வெற்றி பெறும் இடங்கள் எந்த அளவிற்கு இருக்கும் என சி-ஓட்டர் உடன் இணைந்து இந்தியா டுடே நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆய்வு அதிமுகவுக்கு அதிர்ச்சி அளிப்பதோடு, பாஜகவின் செல்வாக்கும் தமிழ்நாட்டில் இன்னும் உயரவில்லை என்பதையும் காட்டுகிறது. திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் 39 தொகுதிகளையும் கைப்பற்றலாம் என்று கூறப்படுகிறது.

சி-ஓட்டர் , இந்தியா டுடே நடத்திய ஆய்வின் முடிவில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் வாக்கு சதவீதம் 5% உயர்ந்துள்ளது எனவும், பாஜக கூட்டணியின் வாக்கு சதவீதம் 3% உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதிமுகவின் வாக்கு 3% சரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 18% வாக்குகளைப் பெற்றிருந்தது. இந்தியா கூட்டணி 47% வாக்குகளைப் பெற்றிருந்தது. அதிமுக கூட்டணி 23% வாக்குகளைப் பெற்றிருந்தது.

இந்நிலையில், இப்போது இந்த தேர்தல் நடைபெற்று இருந்தால் தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 3 சதவீதம் அதிகரித்து 21% வாக்குகளைப் பெற்றிருக்கும். இந்தியா கூட்டணியின் வாக்கு சதவீதம் 5% உயர்ந்து 52% ஆக அதிகரித்திருக்கும். அதிமுக கூட்டணியின் வாக்குகள் 23% இல் இருந்து 20 ஆக குறைந்திருக்கும் என இந்தியா டுடே ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 39 இடங்களையும் திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி கைப்பற்றியது. ஸ்டாலின் தலைமையிலான திமுக 22 இடங்களை வென்றது, காங்கிரஸ் 9 இடங்களையும் கைப்பற்றின.

இன்றைக்குத் தேர்தல் வைத்தாலும் அதே நிலை தான் என்கிறது சி-ஓட்டர் , இந்தியா டுடே நடத்திய Mood Of The Nation கணிப்பு. அதாவது, பாஜக, அதிமுகவுக்கு இப்போதும் ஒரு சீட் கூட கிடைக்க வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி-ஓட்டர் நிறுவனர் யஷ்வந்த் தேஷ்முக், தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட விஜய், 2026 இல் நடைபெற உள்ள அடுத்த சட்டமன்றத் தேர்தலில் X ஃபேக்டராக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளார். பாஜக, அதிமுக மற்றும் விஜய்யின் கட்சியுடன் ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே, திமுகவுக்கு சவாலாக மாற முடியும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.