முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தே அலுவல்களை கவனித்து வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில், அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 3 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவர் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் சில நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை பரிசோதனைகளுக்காக தேனாம்பேட்டை மருத்துவமனைக்குச் சென்ற முதலமைச்சர், பின்னர் மீண்டும் க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குத் திரும்பினார்.
இந்நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்தே தன்னுடைய அலுவலக வேலைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனித்து வருகிறார். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தமிடம் கேட்டறிந்தார்.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் மூலமாக பெறப்பட்ட மனுக்கள், எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன? என்பது குறித்து கேட்டறிந்து ஆலோசனை நடத்தினார்.
மேலும் அரசுத்திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்தவும் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
"தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் மூன்று நாட்கள் ஓய்வு மற்றும் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
மருத்துவமனையில் இருந்தபடியே அவர் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் இன்று (22.7.2025) அவர் அரசு தலைமைச் செயலாளர் நா.முருகானந்தமுடன் அரசுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த 15.7.2025 தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வரும் “உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.
நேற்றைய தேதி வரை இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 5,74,614 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இதில் எத்தனை மனுக்களுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன. பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் உரிய துறைகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனவா போன்ற விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர், தொடர்ந்து இந்த முகாம்கள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி நடத்தப்பட வேண்டும் என்றும், முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
மேலும் பெறப்படும் மனுக்களின் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வித தொய்வுமின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.