தமிழ்நாடு அரசு தலைமைச்செயலகம் 
செய்திகள்

தமிழில் மட்டும்தான் இனி எல்லாம்... தமிழக அரசின் இனிப்பான அறிவிப்பு!

Staff Writer

தமிழக அரசு தரப்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் இனி தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு தரப்பில் வெளியிடப்படும் அரசாணைகள் மற்றும் சில சுற்றறிக்கைகள் தமிழ் அல்லாமல் ஆங்கில மொழியிலும் வெளியிடப்பட்டுவந்தன.

இதனிடையே, மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு, தமிழ் மொழிக்கு அரசுத் துறைகளில் முக்கியத்துவம் அளிப்பதை உறுதிப்படுத்தத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது:

"தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழைப் பயன்படுத்தவும் கீழ்காணும் அறிவுறுத்தல்களை தவறாது பின்பற்ற வேண்டும்.

தமிழக அரசாணைகள், சுற்றறிக்கை குறிப்புகள் தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும். துறைத் தலைமை அலுவலகங்களிலிருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும்.

பொதுமக்களிடமிருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்குத் தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.