தூய்மை பணியாளர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
செய்திகள்

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர் சங்கங்களின் நிர்வாகிகள்!

Staff Writer

தூய்மை பணியாளர்களின் நலன் காக்கும் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர் பல்வேறு தூய்மை பணியாளர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள்.

பணிப் பாதுகாப்பு, ஊதிய நிா்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை ரிப்பன் மாளிகை முன்பு 13 நாள்களாக போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்களை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நேற்று முன் தினம் இரவு அப்புறப்படுத்தியது காவல் துறை.

இதைத் தொடர்ந்து நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் வீடு, காலை உணவு, சிறப்பு மருத்துவ சிகிச்சை, கல்விக் கட்டணம், உள்பட 6 புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தூய்மைப் பணியாளர் சங்கத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தூய்மை பணியாளர்களின் நலன் காக்கும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக முதலமைச்சருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தூய்மைப் பணியாளர்களின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளைச் சந்தித்தேன். நேற்று அரசு வெளியிட்ட அறிவிப்புகளுக்கு மகிழ்ச்சி தெரிவித்து, மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவற்றையும் பரிசீலித்து நிறைவேற்றிக் கொடுப்போம். என்றைக்கும் நாம் உழைக்கும் மக்களுக்குத் துணையாக நிற்போம்” என்று தெரிவித்துள்ளார்.