செய்திகள்

300 கி.மீ. தூரம் போக்குவரத்து நெரிசல்: திணறும் கும்பமேளா!

Staff Writer

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடக்கும் மஹா கும்பமேளாவுக்கு நீராடுவதற்காக அதிகளவில் பக்தர்கள் வந்ததால்,300 கிலோ மீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதை உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் என சமூக ஊடகத்தில் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மஹா கும்பமேளா கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. வரும் 26ஆம் தேதி வரை நடக்கும் இந்நிகழ்வில் பங்கேற்க இன்னும் பலர் வந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் நகரை நோக்கி படையெடுத்தனர். இதனால், அந்நகரை நோக்கி செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது 300 கி.மீ. தூரம் வரை நீண்டதாக பக்தர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து, பல மாவட்டங்களில் போலீசார், பக்தர்கள் செல்லும் வாகனங்களை வேறு பாதையில் திருப்பிவிட்டனர். அதுவும் முடியாத காரணத்தினால், வாகனங்களைத் தடுத்து நிறுத்தினர்.

பிரயாக்ராஜ் நகரை நோக்கி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருப்பதால், கூட்டத்தை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்நகரில் உள்ள ரயில் நிலையம் வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.