நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மூன்று பெண் குழந்தைகளின் கழுத்தறுத்துக் கொலை செய்த தந்தை, தானும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் அருகே உள்ள வேப்பங்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35). இவரது மனைவி பாரதி (26). இந்த தம்பதியினர்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு ஆண், மூன்று பெண் குழந்தைகள் என 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் வழக்கம் போல் கோவிந்தராஜ் குழந்தைகளுடன் திங்கள்கிழமை இரவு உணவு அருந்திவிட்டு மனைவி பாரதி, மற்றும் ஒரு வயதே ஆன தனது ஆண் குழந்தை அனீஸ்வரன் ஆகியோருடன் படுக்கையறையில் உறங்கச் சென்றுள்ளார். பின்னர் படுக்கை அறையை பூட்டிவிட்டு தனியே வெளியே வந்த அவர் அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் ஹாலில் படுத்திருந்த 3 பெண் குழந்தைகளை அரிவாளைக் கொண்டு தலைப்பகுதியில் வெட்டித் துண்டித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரும் அருகில் இருந்த பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குழந்தைகளின் அலறல் சப்தம் கேட்டு படுக்கையறையில் படுத்திருந்த மனைவி பாரதி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மங்களபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கோவிந்தராஜ், பிரக்திஷா ஸ்ரீ (10), ரித்திகா ஸ்ரீ(7), தேவா ஸ்ரீ(6) ஆகிய மூன்று பெண் குழந்தைகளின் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்டமாக காவல் துறையின் விசாரணையில் கோவிந்தராஜ் தனது தொழில் மற்றும் வீட்டுக் கடன் காரணமாக 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியதாகவும் அதற்கு முறையாக பணம் கட்ட முடியாத நிலையில், தற்போது இந்த விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், கோவிந்தராஜ் மதுபோதையில் இந்த கொடூர செயலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு கடன் தொல்லைதான் காரணமா? வேறு ஏதாவது பிரச்சினையா? என மங்களபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.