பரிதாபங்கள் கோபி - சுதாகர் 
செய்திகள்

மூஞ்சில மிளகாய்பொடியை தூவிட்டு முதுகில் குத்தி இருக்கே.. நீ வீரனாடா? - வச்சு செஞ்ச கோபி, சுதாகர்!

Staff Writer

சாதிப் பெருமிதம் பேசிக் கொண்டு ஆணவப்படுகொலைகளை ஆதரிப்பவர்களைக் கிண்டல் செய்து பரிதாபங்கள் யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோ இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

கடந்த ஜூலை 27ஆம் தேதி திருநெல்வேலியில் கவின் செல்வகணேஷ் என்ற தலித் இளைஞரை பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சுர்ஜித் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்தார். தனது அக்கா சுபாஷினியும் கவின் செல்வகணேஷும் காதலித்து வந்தது பிடிக்காத காரணத்தால் சுர்ஜித் இந்த படுகொலையை செய்தார்.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தீரன் சின்னமலை நினைவுநாளையொட்டி சேலம், சங்ககிரி பகுதியில் இளைஞர்கள் சிலர் கார், பைக்கில் அட்டகாசம் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்நிலையில், இந்த இரு சம்பவங்களையும் மையமாக வைத்து பரிதாபங்கள் யூடியூப் சேனலில் கோபி, சுதாகர் தங்களது ஸ்டைலில் நேற்று ‘சொசைட்டி பரிதாபங்கள்’ என்ற வீடியோ வெளியிட்டனர். அதில், ஆதிக்க மனநிலையில் இருக்கும் சாதி வெறியர்கள், தாங்கள் சார்ந்த சாதியில் இருக்கும் இளைஞர்களை எப்படி எல்லாம் மூளைச்சலவை செய்து, அவர்களை கொலையாளிகளாக மாற்றுகிறார்கள். அந்த சாதி வெறியர்களின் பேச்சைக் கேட்டுவிட்டு கொலை செய்துவிட்டு வந்தால், சாதி வெறியர்கள் அந்த இளைஞர்களை எப்படி கையாளுகிறார்கள் என்பதையும் கோபி சுதாகர் காட்சிப் படுத்தியிருந்தனர்.

மேலும் ‘வீரம்'னா எதிர்ல இருக்கறவன்கிட்டயும் கத்தியைக் கொடுத்து, ரெண்டு பேரும் நேருக்கு நேர் மோதவேண்டியதுதானே? முகத்தில் மிளகாய் பொடியை அடித்துவிட்டு முதுகில் குத்தி இருக்க நீ வீரனாடா?’ என்ற வசனம் அடங்கிய வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

பரிதாபங்கள் வீடியோவை பகிர்ந்த பலரும் திருப்பதி லட்டு வீடியோவை நீக்க வைத்தது போன்று, இந்த வீடியோவையும் நீக்க நிர்ப்பந்திக்கப்படலாம், அதனால் வீடியோவை உடனே பார்த்துவிடுங்கள் என பலரும் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவை இதுவரை 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram