தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் நிலுவையில் இருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து உச்சநீதிமன்றம், ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதம் எனக்கூறி தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில் ஆளுநரின் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குகளைத் தாக்கல் செய்தது.
இந்த விவகாரத்தில் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு ஆளுநர் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும், பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும் என இரண்டு வழக்குகளை தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த வழக்குகள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நான்கு நாட்கள் தொடர் இறுதி விசாரணைக்குப் பிறகு பிப்ரவரி 10-ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம், “சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீதான ஆளுநரின் செயல்பாடு ஏற்புடையதல்ல” எனத் தெரிவித்தது.
மேலும் சட்டப்பேரவையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டால், அந்த மசோதாவுக்கு அனுமதி வழங்கலாம், நிறுத்தி வைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். ஆனால் தான் நிறுத்தி வைக்கும் மசோதா செல்லாது எனக் கூறும் அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பக்கூடாது என்பதே விதி என்றும், ஆளுநருக்குத் தன்னிச்சையான அதிகாரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்றும், அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதும் செல்லாது என்றும் கூறியுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142ன் படி, குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கான அதிகாரத்தின்படி நடந்துகொள்ளவில்லை எனத் தீர்ப்பில் கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், விதிகள் அடிப்படையில் ஆளுநர் செயல்படாமல் இருந்துள்ளார் என அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் பொதுவான விதியின்படி ஆளுநர் என்பவர் மாநில அரசின் ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.