“இனி கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால், அதை ஓட்டிட்டு வர்ற ட்ரைவரே அதில் பேஷண்டாக போகிற நிலைமை வரும்”என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று மாலை வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் நின்றபடி தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவ்வழியாக 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதனால் எரிச்சலடைந்த பழிசாமி “ஏய் அந்த ஆம்புலன்ஸ நிறுத்துங்கப்பா. ஏய்...ஏய்... அடிக்காத.என்ன அடிக்கடி இந்த மாதிரி வந்துட்டு இருக்கீங்க? அந்த ஆம்புலன்ஸ்ல நோயாளி இருக்காங்களானு பாருங்க. ஆம்புலன்ஸ் நம்பரை குறிச்சு வச்சிக்குங்க.” என்று கூறி ஆவேசமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய பழனிசாமி, “இங்க மட்டும் இல்லைங்க… கூட்டம் நடக்குற எல்லா இடத்துலயும் இப்படி தான் பன்றாங்க. இது தான் இவங்க வேலையே. இனி நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் அதனை ஓட்டு வரும் ஓட்டுநரே நோயாளியாக மாற்றப்பட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பப்படுவார்” என்று எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுக்கும் விதமாகப் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.