மத்திய - மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று கூடிய தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசு எப்படியெல்லாம் மாநிலங்களின் உரிமைகளை பறித்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டி பேசினார். அப்போது அவர்: ”மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கூட்டாட்சி கருத்தியலை வலியுறுத்தவும், ஒன்றிய – மாநில அரசுகளின் உறவுகளை அதற்குரிய கொள்கைகளை மேம்படுத்திடவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதிக்கூறுகள், நடைமுறையில் உள்ள சட்டங்கள், ஆணைகள் ஆகியவற்றை அனைத்து நிலைகளிலும் ஆராய்ந்து மறு மதிப்பீடு செய்திடவும், அதற்குரிய நடவடிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்திடவும் உயர்மட்ட அளவிலான குழு அமைப்பது அவசியமாகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கான நியாயமான உரிமைகளைப் பாதுகாத்திடவும், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இந்த உயர்நிலைக்குழுவின் உறுப்பினர்களாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான அசோத் வர்தனும், தமிழ்நாடு திட்டக்குழுவின் முன்னாள் துணைத்தலைவர் பேரா. மு. நாகநாதனும் இருப்பார்கள். இந்த குழு 2026 ஜனவரி இறுதிக்குள் இடைக்கால அறிக்கையும் 2 ஆண்டுகளில் இறுதி அறிக்கையும் அரசுக்கு சமர்ப்பிக்கும்.” என்றார்.