கழிவுகள் அதிகம் கலப்பதால் திரிவேணி சங்கம தண்ணீர் குளிப்பதற்கு தகுதியற்றதாக இருப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. 40 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த நிகழ்விற்கு, உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர்.
நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பமேளாவுக்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் விழா முடிய சில நாட்களே இருக்கும் நிலையில், பக்தர்கள் எண்ணிக்கை தற்போது 50 கோடிக்கும் மேல் தாண்டியுள்ளது. இன்னும் தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், மகா கும்பமேளா நிகழ்வு குறித்து ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது. திரிவேணி சங்கமத்தில் அதிகளவு பாக்டீரியா இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதன் மற்றும் விலங்குகளின் கழிவுகளில் இருக்கும் ஃபேசல் வகை பாக்டீரியாக்கள் அதிகளவு நீரில் கலந்து இருப்பதாகவும், இந்த நீர், குளிப்பதற்கு தகுதியற்றதாக இருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதனை சுட்டிக்காட்டி உடனடியாக நடவடிக்கை எடுக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் விரிவான அறிக்கை அளிக்கவும் உத்தர பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஆணையிட்டுள்ளது.