கர்நாடகாவில் உள்ள 223 சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.14,359 கோடியாகும். இது மற்ற மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பை விட அதிகம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு மையம் ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து, நாடு முழுவதும் உள்ள மாநில சட்டப்பேரவைகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போது பதவியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்புகள் குறித்து ஆய்வு செய்தது. இது தொடர்பான அறிக்கை நேற்று அந்த அமைப்பு வெளியிட்டது.
தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள், கடந்த தேர்தலின் போது போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் இருந்து இந்தத் தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளன. 28 சட்டமன்றங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள சுயேட்சை மற்றும் 84 அரசியல் கட்சிகளை சேர்ந்த 4,001 எம்எல்ஏக்களில் சொத்து மதிப்பு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்படி கர்நாடகத்தைச் சேர்ந்த 223 எம்எல்ஏக்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ14,359 கோடியாகும். கர்நாடகாவை அடுத்து மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு 284 சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு ரூ6,679 கோடியாகவும், அதில் 174 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு ரூ.4,914 கோடியாகவும் உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள 174 சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு ரூ. 4,914 கோடி.
1,256 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த சொத்து மதிப்பு, ரூ. 16,234 கோடி. 719 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு ரூ. 15, 798 கோடி. 131 திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு ரூ. 1,663 கோடி.
இந்தியாவில் உள்ள 4,001 சட்டமன்ற உறுப்பினர்களிம் மொத்த சொத்து மதிப்பு 54,545 கோடியாகும்.