ஹைதராபாத் கொலை சம்பவம் 
செய்திகள்

மனைவியை கொன்று, துண்டு துண்டாக வெட்டி வேகவைத்த கொடூர கணவர்!

Staff Writer

மனைவியை கொன்று, அதை மறைப்பதற்காக உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் வேகவைத்த கொடூர கணவனை போலீசார் கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதை சேர்ந்தவர் குருமூர்த்தி, ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில், செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி மாதவி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

மாதவியை காணவில்லை என அவரது பெற்றோர், ஹைதராபாத் போலீசில் கடந்த 16ஆம் தேதி புகார் அளித்தனர். அவர்களோடு குருமூர்த்தியும் போலீஸ் ஸ்டேஷன் சென்றிருந்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், மாதவியை தேடும் பணியை துவக்கினர். விசாரணையின் போது, குருமூர்த்தி மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

அவரை தனியாக அழைத்து தீவிர விசாரணை நடத்தியதில், மனைவி மாதவியை கொன்றதை, குருமூர்த்தி ஒப்புக் கொண்டார். அவர் காவல் துறை விசாரணையில் கூறியதாவது:

“என் வீட்டில் வைத்துதான் மாதவியை கொன்றேன். போலீசில் மாட்டிக் கொள்வோம் என்ற பயம் ஏற்பட்டது. கொலையை மறைக்க முடிவு செய்தேன்.

உடலை, பாத்ரூம் எடுத்துச்சென்று சிறிய சிறிய துண்டுகளாக வெட்டினேன். அந்த துண்டுகளைக் குக்கரில் வைத்து வேக வைத்தேன். வெந்தவுடன் சதை தனியாக, எலும்பு தனியாக பிரித்தேன். உலக்கையால் எலும்புகளையும், சதைகளையும் இடித்து நசுக்கினேன்.

பின் குக்கரில் மீண்டும், மீண்டும் வேகவைத்தேன். இதற்கு மூன்று நாட்கள் ஆனது. பின் அவற்றை எடுத்துச் சென்று ஏரியில் வீசிவிட்டேன்.” என்று கூறினார்.

குருமூர்த்தி - மாதவிக்கு இடையே அடிக்கடி சண்டை நடக்கும் என்பதை அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் உறுதி செய்து உள்ளனர்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், கொலைக்கான காரணம் குறித்து வாய் திறக்கவில்லை. போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.