”பா.ம.க.வுக்கு என் மூச்சு இருக்கும் வரை நானே தலைவர். அன்புமணி செயல் தலைவர். இது என் நண்பர் கலைஞரின் பாணி.” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக-வில் கடந்த சில மாதங்களாகவே நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் அதிகார மோதல் நிலவிக்கொண்டிருக்கிறது.
நேற்றைய தினம் பா.ம.க நிறுவனத் தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க சேலம் மாநகர மாவட்டச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான அருளுக்கு பா.ம.க இணை பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று மாலையே அருள் கவனித்து வந்த சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் பதவிக்கு க.சரவணன் என்பவரை அன்புமணி நியமித்தார்.
இதனால், பா.ம.க உள்கட்சி அரசியலை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், "பா.ம.க கட்சிக்கு என் மூச்சிருக்கும் வரை நானே தலைவர். அன்புமணி செயல் தலைவர். இது என் நண்பர் கலைஞரின் பாணி.
அவர் கடைசிவரை சர்க்கர நாற்காலியில் இருந்தும் கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைவராக இருந்தார். இப்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின் அவர்கள், அப்போது முணுமுணுக்கவில்லை" என்று கூறினார்.
தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி போஸ்டர் கிழிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, "ஏதாவது விஷமிகள் செய்திருப்பார்கள். போஸ்டர்களை யார் வேண்டுமானாலும் ஒட்டலாம். ஆனால் கிழிக்கக் கூடாது. அது நாகரீகமற்றது" என்றார்.
நேற்று மாலை அன்புமணி அருளின் சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு மற்றொருவரை நியமித்தது குறித்து அருள் பேசுகையில், "கட்சியில் யாரையும் பதவியில் அமர்த்தவும் நீக்கவும் ராமதாஸ் அவர்கள் ஒருவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது" எனக் கூறியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பப்பட்டபோது,
"அருள் மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறார். மாவட்டச் செயலாளர் பொறுப்புடன் கூடுதலாக அவருக்கு மாநில அளவிலான இணைப் பொதுச் செயலாளர் பொறுப்பை வழங்கியிருக்கிறோம்" எனப் பதிலளித்தார் ராமதாஸ்.
இந்து முன்னணி நடத்திய முருகன் மாநாட்டில் போடப்பட்ட அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களை விமர்சிக்கும் வீடியோ பற்றிய கேள்விக்கு, "இது வருந்தக் கூடிய ஒன்று. தமிழ் மக்களுக்காகத் தொண்டாற்றி தமிழர்கள் மனதில் வாழும் மறைந்த தலைவர்களைக் கொச்சைப்படுத்தக் கூடாது.
அவர்களது இந்தக் கருத்துக்களில் எங்களுக்கு மாற்றுக்கருத்து உள்ளது எனக் கூறலாமேத் தவிர, இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது"
மேலும் பாமக விவகாரங்கள் பற்றி பேசிய அவர், "தேர்தல் நெருங்கும் சமயத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும். அதற்கு முன்னர் நிர்வாகக் குழு, மாநில செயற்குழுக் கூட்டங்கள் கூட்டப்பட்டு, அவர்கள் கருத்துக்களைக் கேட்டு பொதுக்குழு கூட்டப்படும்.
நானே தலைவராக இருக்கிறேன். தேர்தல் யுத்திகள், அணி சேர்வது குறித்து பொதுக்குழுவினர் முடிவெடுப்பார்கள். பொதுக்குழு கூடும்போதே இளைஞரணித் தலைவர் குறித்தும் அறிவிப்போம்" என்றார்.