நடிகை இமான்வி இஸ்மாயில் 
செய்திகள்

‘நான் பாகிஸ்தானி இல்லை’ – ட்ரோல் செய்த வலதுசாரிகள்…. விளக்கம் அளித்த நடிகை!

Staff Writer

பிரபாஸ் பட நாயகி இமான்வி இஸ்மாயில் பாகிஸ்தானை சேர்ந்தவர் என நினைத்து, அவரை வலதுசாரி கும்பல்கள் இணையத்தில் ட்ரோல் செய்தது. இதற்கு அவர், தான் பாகிஸ்தானை சேர்ந்தவர் இல்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பெகல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இது இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் இந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விமர்சனங்களில் ஹனு ராகவபுடி இயக்கி வரும் பிரபாஸின் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் அறிமுக நடிகை இமான்வி இஸ்மாயிலும் சிக்கினார்.

அவரை பாகிஸ்தானை சேர்ந்தவர் என எண்ணி, இப்படத்திலிருந்து அவரை நீக்குமாறு சிலர் இணையத்தில் கூறினர். இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு நடிகை இமான்வி பதிலளித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

பெகல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது இரங்கலை பகிர்ந்து கொண்ட அவர் அதை கடுமையாகக் கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தான் பாகிஸ்தானி இல்லை என்றும், தனது குடும்பத்தில் யாருக்கும் பாகிஸ்தான் ராணுவத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

தான் ஒரு இந்திய-அமெரிக்கர் என்றும், லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்தவர் என்றும், அங்கு தனது பெற்றோர் சட்டப்பூர்வமாக இடம்பெயர்ந்து பின்னர் அமெரிக்க குடிமக்களாக மாறியதாகவும் அவர் விளக்கினார்.