“என் சொந்த நாட்டில் எனக்கு பாதுகாப்பு தேவையில்லை” என சீமான் கூறினார்.
தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டதை திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் விஜய்-க்கு பாதுகாப்பு அளிக்கப்படுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான் அளித்த பதில். “தம்பி விஜய் வெளியில் வந்தால் அவருடன் புகைப்படம் எடுக்க ஏராளமானோர் வருவார்கள்.
விஜய் போன்ற புகழ்பெற்ற நடிகருக்கு அது சிரமம்தான். அதனால் விஜய்-க்கு தேவைப்பட்டிருக்கும். கேட்டு வாங்கி இருப்பார்கள். இதனை பெரிதுபடுத்த தேவையில்லை. விஜய்க்கு பாதுகாப்பு கொடுத்தால், அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்துவிடுவாரா என்ன? எனக்கு என் சொந்த நாட்டில் பாதுகாப்பு தேவையில்லை. நான்தான் நாட்டுக்கு பாதுகாப்பு.” என்றார்.
தொடர்ந்து, ஓட்டுப் பிச்சை எடுக்க வந்தவர் சீமான் என்ற அண்ணாமலையின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “குஜராத்தில் ஆயிரக்கணக்கான மக்களை கொன்றவர்களை அண்ணாமலை எப்படி பார்க்கிறார்? குஜராத் கலவரத்தில் இறந்த மக்களுக்கு தாய், தந்தை இருக்கிறார்கள் தானே? கோவை குண்டுவெடிப்பு குறித்து பேசுபவர்கள் குஜராத் கலவரம் குறித்தும் பேசுங்கள்.
Recommended For You
ஓட்டு பிச்சை எடுக்க நீங்கள் பேசுகிறீர்களா? நான் பேசுகிறேனா? நான் மக்களுக்காகவே நிற்கிறேன். ஆனால் நீங்கள் தேர்தலை வாக்கு விற்கும் சந்தையாக மாற்றிவிட்டீர்கள். இதன்பின் கைக்கூலி, ஓட்டுப் பிச்சை என்று சொல்கிறார்கள். அண்ணாமலையின் பேச்சு அநாகரீகமானது. குற்றச்செயல்கள் நடந்தால், அதற்கான காரணத்தை ஆராய வேண்டும். நாங்கள் ஓட்டுப் பிச்சை கேட்கிறோம் என்றால், நீங்கள் என்ன கேட்கிறீர்கள். தானம் செய்யுங்கள், காணிக்கை கேட்கிறீகளா?’ என்று பதிலடி கொடுத்தார்.
தொடர்ந்து பிரபாகரன் புகைப்படம் தொடர்பான வழக்கு பற்றிய கேள்விக்கு, “அரசியல் ஆதாயம் இருந்தால் எல்லோரும் பயன்படுத்தி கொள்ளுங்கள். அதற்காகதான் இத்தனை நாட்களாக போராடுகிறேன். அவருடன் எடுத்த ஒரு புகைப்படத்திற்காக வழக்குகள் பெற்றுள்ளேன். சிறைக்கு சென்றுள்ளேன்” என்றார்.